இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்று அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 21) முதல் தொடங்குகிறது.
டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில், ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதாக முடிவெடுத்துள்ளார்.
ரஞ்சி கோப்பையில் பஞ்சாபுக்கான நாக் அவுட் சுற்று வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பஞ்சாப் அணி லீக் சுற்றில் மீதமுள்ள 3 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தால், நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில் ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, ஷுப்மன் கில் ஓய்விலிருக்க விரும்பவில்லை. அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 11 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.