நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்றுத் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் தொடருக்காக 8 முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் முறையாக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த நிலையில், இந்திய அணி தங்களுக்கு கிடைக்கும் நல்ல தொடக்கத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் ரன்கள் குவிக்க முயற்சிக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யாததாக நினைக்கவில்லை. ஆனால், நாங்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாடவில்லை. பேட்டர்களுக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை அவர்களால் பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை.
மிகப் பெரிய இலக்கை துரத்தும்போது, வீரர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சிறப்பான தொடக்கத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஸ்கோர்கள் குவிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக மாறிவிடும். குறைந்தது இரண்டு வீரர்களாவது மிகப் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இதுவே இந்திய அணிக்கும், நியூசிலாந்துக்கும் இடையே உள்ள வேறுபாடு.
நியூசிலாந்து அணி வீரர்கள் அவர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தவுடன், அவர்கள் நீண்ட நேரம் களத்தில் நின்று பெரிய அளவில் ரன்கள் குவித்தார்கள். அதுவே நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். முதல் இரண்டு போட்டிகளில் எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும், அதனை என்னால் 100, 120 அல்லது 130 என பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை. இந்திய அணியின் பேட்டிங்கில் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். நல்ல தொடக்கம் கிடைக்கும்போது, அதனை வீரர்கள் பெரிய ஸ்கோர்களாக மாற்ற வேண்டும் என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் ஷுப்மன் கில் தலா 56 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.