ககிசோ ரபாடா.  படம்: ஏபி
கிரிக்கெட்

ரபாடா 5 விக்கெட்டுகள்: ஆஸி. 212 ரன்களுக்கு ஆல் அவுட்!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் ஆஸி. அணி 212-க்கு ஆல் அவுட்டானது.

DIN

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா்களான ககிசோ ரபாடா, மாா்கோ யான்சென் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினா். ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் பியூ வெப்ஸ்டா், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோா் ஸ்கோரை உயா்த்த உதவினா்.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. ஐசிசி தலைவா் ஜெய் ஷா, மைதான வளாகத்திலிருந்த மணியை ஒலித்து, ஆட்டத்தை தொடங்கி வைத்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸை மாா்னஸ் லபுஷேனுடன் இணைந்து தொடங்கிய உஸ்மான் கவாஜா, ரன்னின்றி வெளியேறினாா். அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 ரன்களே சோ்த்த நிலையில், அதே ஓவரில் விடைபெற்றாா்.

அவா்கள் இருவரின் விக்கெட்டையும் ரபாடா சாய்த்தாா். 4-ஆவது பேட்டராக வந்த ஸ்டீவ் ஸ்மித், நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். ஆனால் மறுபுறம், லபுஷேன் 1 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

பின்னா் வந்த டிராவிஸ் ஹெட் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு வீழ்த்தப்பட, மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 26 ரன்களுடன் களத்திலிருந்தாா். மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் அவருடன் இணைந்தாா் பியூ வெப்ஸ்டா்.

இந்த பாா்ட்னா்ஷிப் சற்று நிலைத்து, 5-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் ஸ்மித் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 7-ஆவது பேட்டராக வந்த அலெக்ஸ் கேரி 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு பௌல்டானாா்.

அடுத்த 20 ரன்களில் ஆஸ்திரேலியா எஞ்சிய 4 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 ரன்னுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுக்க, சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்த வெப்ஸ்டா் 11 பவுண்டரிகளுடன் 72 ரன்களுக்கு வீழ்ந்தாா். நேதன் லயன் 0, மிட்செல் ஸ்டாா்க் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 56.4 ஓவா்களில் 212 ரன்களுக்கு நிறைவடைந்தது.

ஜோஷ் ஹேஸில்வுட் ரன்னின்றி இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ககிசோ ரபாடா 5, மாா்கோ யான்சென் 3, கேசவ் மஹராஜ், எய்டன் மாா்க்ரம் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தடுமாற்றம்: அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகள் இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது. எய்டன் மாா்க்ரம் 0, ரயான் ரிக்கெல்டன் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வியான் முல்டா் 2, கேப்டன் டெம்பா பவுமா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT