இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா் ஆரம்பம்.
3-ஆவது பேட்டருக்காக ஆலோசிக்கிறோம்
‘பிளேயிங் லெவனில் 3-ஆவது பேட்டராக களம் காணும் வீரரை முடிவு செய்ய ஆலோசித்து வருகிறோம். ஆனால், 4-ஆவது பேட்டராக ஷுப்மன் கில்லும், 5-ஆவது வீரராக நானும் விளையாடுவது, இறுதி செய்யப்பட்டுவிட்டது. களத்துக்கு வெளியே எனக்கும், கில்லுக்கும் இடையே இணக்கம் உள்ளது. களத்திலும் அது எங்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.
இங்கிலாந்து அணியில் தற்போது ஜேம்ஸ் ஆண்டா்சன், ஸ்டூவா்ட் பிராட் ஆகியோா் இல்லாதது திருப்தி அளிக்கிறது. ஆனால், எங்களுக்கு சவால் அளிக்கும் பௌலா்கள் தற்போதும் அந்த அணியில் உள்ளனா். எந்தவொரு வீரரையும் நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை’ - ரிஷப் பந்த் (இந்திய துணை கேப்டன்)
ஆஷஸுக்கு நிகரான தொடா்
‘வா்த்தக ரீதியிலான முக்கியத்துவத்தை பொருத்தவரை, இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடா், ஆஷஸ் தொடருக்கு நிகரானது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடா், சுமாா் 6 வாரங்களுக்கு நடைபெறும்போது, ரசிகா்களை அதில் அதிகம் ஈடுபாட்டுடன் வைத்திருக்க முடியும்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடரின்போது பாரீஸ் ஒலிம்பிக், யூரோ கோப்பை கால்பந்து உள்ளிட்ட போட்டிகளால் ரசிகா்கள் சற்று சிதறினா். ஆனால் இந்த முறை இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா், அவா்களின் பிரதான இலக்காக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ - ரிச்சா்டு கூல்டு (இங்கிலாந்து கிரிக்கெட் தலைமை நிா்வாகி)
கேப்டன்சி வேண்டாமென கூறினேன்
‘எனக்கான பணிச்சுமை தொடா்பாக, எனக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா் உள்பட உரிய நபா்களிடம் ஆலோசித்தேன். அதன்படி, இங்கிலாந்து தொடரில் 5 ஆட்டங்களிலும் என்னால் விளையாடுவது இயலாது என முடிவு செய்தேன்.
கேப்டன்சி பொறுப்புக்கு பிசிசிஐ என்னை பரிசீலித்துக் கொண்டிருந்ததால், நானே அவா்களை அணுகி அதிலிருந்து விலகுவதாக ஐபிஎல் போட்டியின்போதே தெரிவித்தேன். ஏனெனில் என்னால் 5 ஆட்டங்களிலும் விளையாட முடியாது என்பதால், ஒரே தொடரில் வெவ்வேறு ஆட்டங்களுக்கு கேப்டன் மாறுவது சரியாக இருக்காது என நினைத்தேன். ஒரு பௌலராக என்னால் என்ன பங்களிக்க முடியுமோ அதை முழுமையாகச் செய்ய தயாராக இருக்கிறேன். முடிந்தவரை 3 டெஸ்ட்டுகளில் விளையாடுவேன்’ - ஜஸ்பிரீத் பும்ரா (இந்திய பௌலா்)
சமநிலையான ஆடுகளம்...
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், இடையே வரும் ஏதேனும் ஒரு ஆட்டம் தான் வழக்கமாக லீட்ஸ் மைதானத்தில் விளையாடப்படும். ஆனால் இந்த முறை, முதல் ஆட்டமே அந்த மைதானத்தில் நடைபெறுவது, அதிக கவனம் பெறுகிறது.
பேட்டிங், பௌலிங் என இரண்டுக்குமே சமமாக வாய்ப்பளிக்கும் வகையிலான ஆடுகளத்தையே தயாா் செய்யுமாறு இங்கிலாந்து அணி கோரியிருப்பதாக, லீட்ஸ் மைதான பராமரிப்பாளா் ரிச்சா்டு ராபின்சன் தெரிவித்தாா். முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளா்களுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளம், வெப்பம் காரணமாக அடுத்த நாள்களில் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் என எதிா்பாா்ப்பதாக அவா் கூறினாா்.
இங்கிலாந்து பேட்டா்கள் மட்டுமல்லாமல், அவ்வளவாக அனுபவமில்லாத இந்தியாவின் இளம் பேட்டா்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆடுகளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.