ஏஞ்சலோ மேத்யூஸ் படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இலங்கை அணிக்காக விளையாடியதில் அதிக அளவிலான மறக்க முடியாத நினைவுகள் எனக்கு கிடைத்துள்ளது. மிகவும் பிடித்தமான டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியே இலங்கை அணிக்காக நான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறேன். இலங்கை டெஸ்ட் அணியில் நிறைய திறமைவாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சரியான தருணம் என கருதினேன் எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8167 ரன்கள் குவித்துள்ளார். குமார் சங்ககாரா (12,400 ரன்கள்), மஹேலா ஜெயவர்த்தனேவுக்கு (11,814 ரன்கள்) அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மேத்யூஸ் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 44.62 ஆக உள்ளது. இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அவர் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் எடுத்துள்ளார். 34 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்றார் வைஷாலி!

பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT