முகமது ஷமி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (மே 24) அறிவித்தது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, முழு உடல்தகுதியுடன் இல்லாத காரணத்தினால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் முகமது ஷமி விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மிக முக்கியமான டெஸ்ட் தொடரிலும் அவர் அணியில் இடம்பெறாதது, அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடிய முகமது ஷமி, தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும், அவரால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், இறுதிக்கட்டப் போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. மிக முக்கியத் தொடர்களான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் முகமது ஷமி இடம்பெறாத நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களுக்கு அவரை தேர்வுக்குழு உறுப்பினர்கள் அணியில் தேர்வு செய்வார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அணியின் பிரதான பந்துவீச்சாளர்களாகத் திகழும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜுக்கு உறுதுணையாக ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா அல்லது முகேஷ் சௌத்ரி போன்ற வீரர்களை சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களுக்கு இந்திய அணி தேர்வுக்குழு உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

முகமது ஷமிக்கு வயதாகிவிட்டது, அவரால் பழையபடி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே எனத் தேர்வுக்குழு மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முகமது ஷமியின் அதிகாரபூர்வ வயது 34. ஆனால், பெங்கால் கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் அவருக்கு கிட்டத்தட்ட 40 வயதாவதாக கூறப்படுகிறது. அதனால், அவர் மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணிக்காக இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT