தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் முன்னாள் கேப்டன்களுமான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்டனர். அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.
2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னதாக தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருவரும் உள்ளனர்.
இதனால், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ அணிக்காக அவர்கள் விளையாடவிருந்தனர். மூன்று போட்டிகள் இந்தத் தொடரில் முதல் போட்டி நவ.13 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டிக்கான அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் இந்தியா ஏ அணியில் இடம்பெற மாட்டார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறிய தகவலின்படி, இந்தியா ஏ அணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர்கள் விளையாடிய விதம் மற்றும் உடற்தகுதி, அணித் தேர்வர்களுக்கு திருப்தியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே 73 மற்றும் 121* ரன்களும், விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் டக்-அவுட் ஆகியிருந்தாலும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் 74* ரன்களும் எடுத்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.