இங்கிலாந்து அணியின் கேப்டனாக தான் இருந்தால் எதனை விரும்ப மாட்டேன் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்னஸ் லபுஷேன் இடம்பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் குயின்ஸ்லாந்துக்காக அபாரமாக விளையாடியதையடுத்து, லபுஷேன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஷெஃபீல்டு ஷீல்டு போட்டிகளிலும் லபுஷேன் சிறப்பாக விளையாடினார்.
இந்த நிலையில், ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுஷேன் இடம்பெற்றுள்ளதால் அணி மிகவும் சமபலத்துடன் இருப்பதாக தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மார்னஸ் லபுஷேன் 3-வது வீரராக களமிறங்கி சிறப்பாக ரன்கள் குவிக்கும் ஆஸ்திரேலிய அணியே, எப்போதும் எங்களது சிறப்பான ஆஸ்திரேலிய அணி எனக் கூறுவேன். எதிரணி வீரராக இருந்து நான் நினைத்துப் பார்க்கிறேன். இங்கிலாந்து அணியின் கேப்டனாக நானிருந்தால், எந்த மாதிரியான ஆஸ்திரேலிய அணியை நான் விரும்பமாட்டேன் தெரியுமா? மார்னஸ் லபுஷேன் 3-வது வீரராகவும், ஸ்டீவ் ஸ்மித் நான்காவது வீரராகவும், டிராவிஸ் ஹெட் ஐந்தாவது வீரராகவும் களமிறங்கி ரன்கள் குவிக்கும் ஆஸ்திரேலிய அணியை விரும்பமாட்டேன். ஆனால், தற்போது அப்படிப்பட்ட வலுவான ஆஸ்திரேலிய அணியே உள்ளது என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் மார்னஸ் லபுஷேன் விளாசியுள்ள 11 சதங்களும் அவர் மூன்றாவது வீரராக களமிறங்கி விளாசியதே ஆகும். அவர் மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடியபோது, மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் குயின்ஸ்லாந்துக்காக அண்மையில் அவர் விளாசிய 5 சதங்களும், அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளாசியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.