கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் அபுதாயில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மினி ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் டிரேடிங்கில் ஈடுபட்டு வீரர்களை வாங்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஷேன் வாட்சனை அந்த அணி நிர்வாகம் இன்று நியமித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து செயல்படுவதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றொரு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவ காத்திருக்கிறேன் என்றார்.
உதவிப் பயிற்சியாளராக வாட்சன் நியமிக்கப்பட்டது குறித்து கேகேஆர் அணியின் தலைமை நிர்வாக இயக்குநர் வெங்கி மைசூர் கூறியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குடும்பத்துக்கு ஷேன் வாட்சனை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் ஷேன் வாட்சனின் அனுபவம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உதவியாக இருக்கும். டி20 வடிவிலான போட்டி குறித்து வாட்சனின் புரிதல் நம்பமுடியாத விதமாக இருக்கிறது. ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவரது வழிகாட்டுதல்கள் கொல்கத்தா அணி வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களையும், 280-க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சன் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.