தென்னாப்பிரிக்க அணி கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 14) தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை முதல் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க அணி கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின், கடந்த 15 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது.
இந்த மூன்று சுற்றுப்பயணத்தின்போதும் ஒரு போட்டியில் கூட தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதில்லை. கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 7 டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக தோல்வியையே தழுவியுள்ளது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு அடுத்தபடியாக இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெல்வது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன் என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது மிகப் பெரிய விஷயம் என நினைக்கிறேன். ஆனால், அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வெல்வது மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது கைநழுவிச் செல்கிறது எனக் கூறமாட்டேன். ஆனால், நீண்ட காலமாக எங்களால் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. அதனால், இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான சவால் எப்படி இருக்கும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தென்னாப்பிரிக்க அணியில் உள்ள வீரர்கள் சிலர் தோல்வியை சந்தித்தால், அந்த வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். அதனால், இந்தியாவுக்கு எதிரான கடுமையான சவாலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.