முகப்பு
கிரிக்கெட்

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 27 நவம்பர், 2025 at 4:10 PM
- படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (நவம்பர் 27) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.

ஹாரி டெக்டார் அரைசதம்

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டார் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் டெக்டார் 32 ரன்களும், கர்டிஸ் கேம்ஃபர் 24 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பால் ஸ்டிரிலிங் 21 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் தன்சிம் ஹாசன் சாகிப் 2 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அயர்லாந்துக்கு முதல் வெற்றி

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேசம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டினை இழந்து 142 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் அயர்லாந்து அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆண்டில் அயர்லாந்து அணி டி20 போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வங்கதேச அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தௌஹித் ஹிரிடாய் 50 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜேக்கர் அலி 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்பிரீஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், மார்க் அடாய்ர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

மேத்யூ ஹம்பிரீஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

summary

Ireland won the first T20I against Bangladesh by 39 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.