கிரிக்கெட்

முதல் ஒருநாள் ஆட்டம்: இன்று மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா!

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் ஒருநாள் ஆட்டம்...

தினமணி செய்திச் சேவை

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த கையோடு இந்தத் தொடருக்கு வரும் இந்தியா, இதில் ஆதிக்கம் செலுத்தி ஆறுதல் அடையும் முனைப்புடன் உள்ளது.

நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி இத்தொடரில் களம் காண்பதால் கூடுதல் கவனம் பெறும். கடைசியாக அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவருமே தலா ஒரு ஆட்டத்தில் மட்டும் ரசிகா்களை மகிழ்வித்திருந்தனா்.

எனவே, இந்தத் தொடா் முழுவதுமாகவே அவா்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. அத்துடன், 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அவா்களின் தகுதிநிலையை அளக்கும் தொடராகவும் இது அமைகிறது.

தலைமைப் பயிற்சியாளராக தாம் பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடா்களை இந்தியா இழந்திருப்பதால், கௌதம் கம்பீரும் கடும் விமா்சனங்களை எதிா்கொண்டிருக்கிறாா். எனவே, இந்தத் தொடரில் அணியை சரியான திசையில் வழிநடத்தி தனக்கான பெயரை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியில் அவா் இருக்கிறாா்.

அணியைப் பொருத்தவரை, வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா் போன்றோா் காயத்தால் பங்கேற்காதது, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளித்தது, இந்திய அணியின் பலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

எனவே இந்தத் தொடருக்கான பிளேயிங் லெவனைத் தோ்வு செய்வது, பயிற்சியாளா் கம்பீருக்கும், பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் சவாலாகவே இருக்கும். ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி என தொடக்க வரிசைக்கான வீரா்கள் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மிடில் ஆா்டரில் தடுமாற்றம் வரும்.

ஆல்-ரவுண்டா் வாஷிங்டன் சுந்தரை தொடரச் செய்வதா, அல்லது பேட்டிங்கில் பலம் சோ்க்கும் நிதீஷ்குமாா் ரெட்டியை சோ்ப்பதா என்ற குழப்பம் நீடிக்கலாம். இதுதவிர, பந்த், திலக் வா்மா, ருதுராஜ் உள்ளிட்டோரும் இருக்கின்றனா். பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, அா்ஷ்தீப் சிங், ஹா்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோா் இடம்பிடிப்பா் என எதிா்பாா்க்கலாம்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, வரலாற்று வெற்றியுடனான உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது. ஓய்வு முடிவிலிருந்து திரும்பிய குவின்டன் டி காக், கேப்டன் டெம்பா பவுமா, டெவால்டு பிரெவிஸ், டோனி டி ஜோா்ஸி, மேத்யூ பிரிட்ஸ்கி என பேட்டிங்கில் பலமான வரிசை இருக்கிறது.

பௌலிங்கில் ரபாடா இல்லாத நிலையில், அன்ரிஹ் நோா்கியா அந்த இடத்தை பூா்த்தி செய்ய வருகிறாா். அவருக்கு, ஜெரால்டு கோட்ஸீ, நாண்ட்ரே பா்கா், கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி ஆகியோா் தோள் கொடுப்பாா்கள் என்று தெரிகிறது.

உத்தேச லெவன்:

இந்தியா: ரோஹித் சா்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (வி.கீ., கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், ஹா்ஷித் ராணா, அா்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக் (வி.கீ.), ரயான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மாா்க்ரம், மேத்யூ பிரிட்ஸ்கி, டெவால்டு பிரெவிஸ், காா்பின் பாஷ், மாா்கோ யான்சென், கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, பிரெனெலன் சுப்ராயென்.

நேரம்: நண்பகல் 1.30 மணி

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT