இளம் வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனின் விமர்சனத்துக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அதில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா இடம்பெற்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடம்பெற்றது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரது யூடியூப் சேனலில் அண்மையில் பேசியிருந்தார். அதில் கௌதம் கம்பீரின் செல்வாக்கினால் மட்டுமே ஹர்ஷித் ராணா தேசிய அணியில் இருக்கிறார் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், 23 வயது இளம் வீரரை யூடியூப் சேனல் பார்வைகளுக்காக தாக்கிப் பேசுவதற்கு வெட்கமாக இல்லையா என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: தன்னுடைய யூடியூப் சேனலை நடத்துவதற்காக 23 வயது இளம் வீரரை குறிவைப்பது வெட்கப்பட வேண்டிய செயல். உங்களுக்கு தாக்கிப் பேச வேண்டுமென்றால், என்னை தாக்கிப் பேசுங்கள். என்னால் அதனை கையாள முடியும். ஆனால், யூடியூப் சேனல் பார்வைகளுக்காக 23 வயது இளம் வீரரை குறிவைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
அந்த இளம் வீரரின் (ஹர்ஷித் ராணா) அப்பா ஒன்றும் இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது. அவர் அவருடைய திறமையின் மூலமே அணியில் இடம்பெற்றுள்ளார். அதனால், இது போன்ற இளம் வீரர்களை குறிவைத்து தாக்கிப் பேசாதீர்கள் என்றார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, தில்லியைச் சேர்ந்த இளம் வீரரான ஹர்ஷித் ராணா இந்திய அணிக்காக இதுவரை 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கே.எல். ராகுல் அரைசதம்! மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.