கிரிக்கெட்

டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

இதன் மூலமாக, 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட்டில் மூன்றே நாள்களில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள், இந்த ஆட்டத்தில் சற்று முனைப்புடன் விளையாடி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்ததுடன், ஆட்டத்தையும் 5 நாள்களுக்கு நீடிக்கச் செய்தது.

முன்னதாக, கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்லின் அபாரமான ஆட்டத்தால் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து "டிக்ளேர்' செய்தது.

அடுத்து தனது இன்னிங்ûஸ விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து "ஃபாலோ ஆன்' பெற்றது. 2-ஆவது இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப் ஆகியோர் சதம் விளாசி முனைப்பு காட்ட, அந்த அணி 390 ரன்கள் சேர்த்து, 120 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டமிழந்தது.

இதையடுத்து 121 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது.

கடைசி நாள் ஆட்டத்தை கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் கூட்டணி தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்த ஆட்டத்தில், சுதர்சன் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கும், அடுத்து வந்த கேப்டன் ஷுப்மன் கில் 13 ரன்களுக்கும் வெளியேறினர்.

மறுபுறம், அணியை வெற்றிக்கு வழிநடத்திய ராகுல், முடிவில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

துருவ் ஜுரெல் 6 ரன்களுடன் துணை நின்றார்.

"ஆட்டநாயகன்'

குல்தீப் யாதவ்

8 விக்கெட்டுகள்

(5/82 & 3/104)

"தொடர்நாயகன்'

ரவீந்திர ஜடேஜா

104 ரன்கள்,

8 விக்கெட்டுகள்

பொறுப்புகளை விரும்புகிறேன்

ஒரு ஆட்டத்தில் விளையாடும்போது, இயன்ற வரையில் அதன் சூழலுக்கு ஏற்ற முடிவை மேற்கொள்ள முயற்சிப்பேன். சில வேளைகளில் அதில் துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

எந்த வீரரால் தேவையான ரன்களையோ, விக்கெட்டுகளையோ எடுக்க முடியும் என்பதை தேர்வு செய்வதும் இதில் அடங்கும்.

அணியில் தற்போது இருக்கும் வீரர்களை அதுபோன்ற சூழலுக்கு ஏற்றவாறு கையாள தற்போது நான் பழகிவிட்டதாக நினைக்கிறேன். பொறுப்புகளைக் கையாள்வது எனக்குப் பிடிக்கும். ஆனால் அதை எனது வழியில் எதிர்கொள்ள விரும்புவேன். முக்கிய தருணங்களுக்கான முடிவுகளை மேற்கொள்ளும் சூழலில் இருப்பதே, எனது திறமையை வெளிக்கொண்டுவருகிறது.

எனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டையுமே, தனித்தனியாகவே கையாள்கிறேன். ஆனால், அணியின் வெற்றிக்கு என்ன தேவை என்பது மட்டுமே இரண்டிலும் ஒரே இலக்காக இருக்கும். இந்த ஆட்டத்தில், 2-ஆவது இன்னிங்ஸில் இந்திய பெüலர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்றாலும், ஆடுகளத்தின் தன்மை அடிப்படையிலேயே "ஃபாலோ ஆன்' முடிவை மேற்கொண்டோம்.

-ஷுப்மன் கில் (இந்திய கேப்டன்)

தொடர்ந்து கடினமாக உழைப்போம்

அவ்வளவாக அனுபவ வீரர்கள் இல்லாத தற்போதைய எங்கள் அணி, மாற்றமின்றி அப்படியே இன்னும் பல ஆட்டங்களில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அப்போது தான் அணியிலிருக்கும் வீரர்கள், கிரிக்கெட்டை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் அவர்களிடம் இருந்து அணிக்கு தேவையானதைப் பெற முடியும்.

அதிக முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால், எங்கள் வீரர்கள் 15-20 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடிய நிலையில், நேரடியாக சர்வதேச களத்துக்கு வந்துவிடுகின்றனர்.

ஆனால் இதர அணிகளில் 80-100 முதல்தர ஆட்டங்களில் விளையாடியவர்களே சர்வதேச ஆட்டங்களில் விளையாட வருகின்றனர்.

தில்லி டெஸ்ட்டின் 2-ஆவது இன்னிங்ஸில் எங்கள் வீரர்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். ஒரு ஆட்டத்தில் வெற்றிக்காக எத்தகைய உறுதியையும், நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை தற்போது எங்கள் அணி அறிந்திருக்கிறது. வெற்றியின்போது மட்டுமே அல்லாமல், கடின உழைப்புடன் தொடர்ந்து விளையாடுவதிலும்

மகிழ்ச்சி இருப்பதை அறிந்து, தொடர்ந்து முன்னோக்கிச் செல்கிறோம்.

- ராஸ்டன் சேஸ் (மே.தீவுகள் கேப்டன்)

1 ஷுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி கைப்பற்றியிருக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேப்டனான முதல் தொடரில் இந்தியா 2-2 என இங்கிலாந்துடன் டிரா செய்தது.

10 கடந்த 2002 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 10 தொடர்களை இந்தியா தொடர்ந்து கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக, ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான தொடர்களை வென்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை இந்தியாவும் சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவும் இதே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அந்த சாதனையை படைத்தது (1998 முதல்) குறிப்பிடத்தக்கது.

27 டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா, இத்துடன் கடைசி 27 ஆட்டங்களில் தோல்வியைச் சந்திக்கவில்லை. வேறு எந்தவொரு அணிக்கு எதிராகவும் இந்தியா

இத்தனை ஆட்டங்களை அவ்வாறு கடந்ததில்லை. கடைசியாக இந்தியா 2002-இல் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது.

122 சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்களில், அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளின் வரிசையில், தென்னாப்பிரிக்காவை (121) பின்னுக்குத் தள்ளி, இந்தியா 3-ஆவது இடத்துக்கு (122 வெற்றிகள்) முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா (262), இங்கிலாந்து (241) முதல் இரு இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மேகம், மலை, நீர், நிலம்... ஷாமா சிக்கந்தர்!

மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!

ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT