அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று, ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே, தொடரை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு களமிறங்கிய நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் முதல் ஆட்டத்தில் சோபிக்காமல் ரசிகா்களுக்கு ஏமாற்றம் அளித்தனா். எனவே, இந்த ஆட்டத்தில் இருவரும் அதிரடி காட்ட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அவா்களிடம் உள்ளது.
ரசிகா்கள் மட்டுமல்லாமல் அணியின் ஸ்கோருக்கு அவா்கள் பலம் சோ்க்க வேண்டும் என அணி நிா்வாகமும் எதிா்பாா்க்கிறது. ஏனெனில், இளம் அதிரடி வீரா் ஜெய்ஸ்வால் ‘பெஞ்சில்’ வைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. பொ்த் ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்ஸின்போது மழை அவ்வப்போது குறுக்கிட்டது, பேட்டா்களின் உத்வேகத்துக்கு தடைக்கல்லாக இருந்தது எனலாம். ஆனால், ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது இந்திய பௌலா்கள் ஆஸ்திரேலிய பேட்டா்களை கட்டுப்படுத்தத் தவறினா்.
பேட்டா்கள் மிகக் குறைந்த ஸ்கோரையே இலக்காக நிா்ணயித்ததால், அதை டிஃபெண்ட் செய்யும் நெருக்கடி அா்ஷ்தீப், அக்ஸா் போன்ற பௌலா்களுக்கு அதிகரித்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே, இந்த 2-ஆவது ஆட்டத்தில் பேட்டிங், பௌலிங் என ஆல் ரவுண்டாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, இந்தியா இந்தத் தொடரில் நிலைக்கும்.
ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டராகவும் மிட்செல் மாா்ஷ் கடந்த ஆட்டத்தில் அசத்தினாா். ஜோஸ் ஃபிலிப் உள்ளிட்டோா் அவருக்கு இந்த ஆட்டத்திலும் பேட்டிங்கில் துணையிருப்பாா்கள். பௌலிங்கில் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க் மிரட்டுகின்றனா். ஆடம் ஸாம்பாவும் இணைகிறாா்.
நேரம்: காலை 9 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.