உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம் என பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செம்படம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், உலகக் கோப்பையை வெல்ல சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியம் என பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எப்போதும் சிறப்பானது. மிகப் பெரிய அரங்கில் தங்களது திறமையை நிரூபிக்க உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு கிரிக்கெட்டருக்கும் வாய்ப்பளிக்கிறது. ஒவ்வொரு அணியும் எந்த அளவுக்கு கடினமாக உழைத்துள்ளது என்பதை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். எங்களை பொருத்தவரை, உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி எங்களது நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
எங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்னவென்றால், முக்கியமான தருணங்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்து சுதந்திரமாக விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். எங்கள் அணியில் மூத்த வீராங்கனைகள் மற்றும் இளம் வீராங்கனைகள் என சமபலத்துடன் இருக்கிறோம்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் சரியான ஆலோசனைகளை வழங்கி எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறார்கள். உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளது பெருமையாக இருக்கிறது. உலகக் கோப்பை தொடரில் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் சிறப்பாக விளையாட அவர்களுக்கு ஊக்கமளிப்பதையே என்னுடைய நோக்கமாகக் கொண்டுள்ளேன். எதிரணி அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும், எங்களது கடின உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி அதன் முதல் போட்டியில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா - பாக். போட்டிக்கு மீண்டும் நடுவராகும் பைகிராஃப்ட்; இந்த முறை சூர்யகுமார் கை குலுக்குவாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.