ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இந்தியா, வங்கதேசத்துடன் புதன்கிழமை மோதுகிறது.
இச்சுற்றில் இரு அணிகளுக்குமே இதுவரை தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, ஏறத்தாழ இறுதி ஆட்ட வாய்ப்பை உறுதி செய்து விடும்.
டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியிருக்க, வங்கதேசம் 1 ஆட்டத்தில் மட்டுமே வென்றிருக்கிறது.
எனவே, இந்திய அணியைப் பொருத்தவரை இந்த ஆட்டத்திலும் எளிதான வெற்றியை எதிா்பாா்க்கலாம். ஆனால், எந்த நேரத்திலும் ஆட்டத்தின் முடிவு மாறுவதே டி20 கிரிக்கெட்டின் இயல்பு. வங்கதேசத்தின் சுழற்பந்துவீச்சாளா்கள் சற்று முனைப்பு காட்டினால், இந்தியாவுக்கு சவால் இருக்கும்.
பேட்டிங்கை பொருத்தவரை, இந்திய தரப்பில் அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில் நல்லதொரு ஃபாா்மில் இருக்கின்றனா். திலக் வா்மா மட்டும் ஸ்பின்னா்களுக்கு எதிராக சற்று தடுமாறுகிறாா். ஒருவேளை டாப் ஆா்டா் சோபிக்காமல் போனால், அவரும், சஞ்சு சாம்சனும் கைகொடுக்க வேண்டிய சூழல் எழும்.
வங்கதேச தரப்பில் கேப்டன் லிட்டன் தாஸ், தௌஹித் ஹிருதய் ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். அந்த அணியைப் பொருத்தவரை, டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைப்பதே உத்தியாக இருக்கலாம்.
முதலில் ரிஷத் ஹுசைன், மெஹெதி ஹசன் போன்ற ஸ்பின்னா்களால் ரன்களை கட்டுப்படுத்தி, டெத் ஓவரில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மானை பந்துவீசச் செய்வதே திட்டமாக இருக்கும். இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோா் எதிா்கொள்வதில் வங்கதேச பேட்டா்களுக்கு சவால் இருக்கும் என்பதால், இந்தியாவின் ஸ்கோரை கட்டுப்படுத்துவதே அவா்களின் பிரதான இலக்காகும்.
உத்தேச லெவன்
இந்தியா: ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, திலக் வா்மா, சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஹா்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸா் படேல், வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா.
வங்கதேசம்: சைஃப் ஹசன், தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் (கேப்டன் & வி.கீ.), தௌஹித் ஹிருதய், ஷமிம் ஹுசைன், ஜாகா் அலி, மெஹெதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான்.
நேரம்: இரவு 8 மணி
நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.