சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஷகிப் அல் ஹசன் சாதனை முறியடிப்பு
வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
அந்தப் போட்டியில் வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டினைக் கைப்பற்றினார். சர்வதேச டி20 போட்டிகளில் முஸ்தஃபிசூர் ரஹ்மானின் 150-வது விக்கெட் இதுவாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முஸ்தஃபிசூர் 150 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கடந்தது மட்டுமின்றி, வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இதற்கு முன்பாக, வங்கதேச அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வீரர்கள் வரிசையில் ரஷித் கான் (173 விக்கெட்டுகள்), டிம் சௌதிக்கு (164 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக 151 விக்கெட்டுகளுடன் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.