2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் முறையாகக் கோப்பையை வென்று அசத்தியது.
2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தமாக 12 அணிகள் பங்கேற்றிருந்தன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்திடம் வெற்றி பெற்றது. ஆனால், சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால், கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது.
பாகிஸ்தான் அணி தொடரை நடத்தும் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியுடன் உலகக் கோப்பைத் தொடரைத் தொடங்கியது. பின்னர் சூப்பர் 8-ல் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது. ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பாகிஸ்தான்.
சூப்பர்-8 சுற்றில் முதலில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அதன்படி, முதல் அரையிறுதியில் பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் மோதியதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
அதேபோல, இரண்டாவது அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளும் இலங்கையும் மோதியதில் இலங்கை முதல்முறையாகவும் பாகிஸ்தான் இரண்டாவது முறையாகவும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன.
2009 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கோப்பையைக் கைப்பற்ற கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் திடலில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதின.
'டாஸ்' வென்ற இலங்கை அணி எதிர்பார்த்தது போலவே முதலில் பேட்டிங் செய்வதாக கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்ககாரா தெரிவித்தார். பெரியளவில் ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 138 ரன்களையே சேர்த்தது. ஆறுதல் அளிக்கும் விதமாக கேப்டன் சங்ககாரா மட்டும் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் 35 ரன்கள் விளாசினார். அப்துல் ரசாக் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், 8 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. ஒட்டுமொத்தமாக இலங்கை வீரர்களின் ஆட்டம் இறுதிப்போட்டியில் எடுபடவில்லை.
முன்னதாக பேட்டிங்கில் ஏமாற்றம் கண்ட இலங்கை அணி, பாகிஸ்தான் பேட்டிங்கின்போது பந்துவீச்சிலும் ஜொலிக்க முடியவில்லை. கம்ரான் அக்மலும், ஷாஜைப் ஹசனும் நிலைத்து ஆடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்களைச் சேர்த்தனர்.
கம்ரான் அக்மல் 37 ரன்களும், ஷாஜைப் ஹசன் 19 ரன்களும், ஷோயப் மாலிக் 24 ரன்களும், அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சாஹித் அப்ரிதி 2 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் தரப்பில் ஜெயசூர்யா, முரளீதரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 18.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி முதல் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு ஆறுதல் தேடிக்கொண்டது.
தொடர் நாயகன் தில்ஷன்
இந்தத் தொடரில் 219 பந்துகளில் 317 ரன்களைக் குவித்ததற்காக இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர், ஒட்டுமொத்தமாக 7 ஆட்டங்களில் 46 பௌண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.