பிஃபாவின் வரலாறு... 1938-ல் இத்தாலி 2-வது முறை சாம்பியன்!
1938 பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்ததைப் பற்றி...
1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
1930, 1934-ல் நடைபெற்ற தொடர்களைத் தொடர் 1938 ஆம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பைத் தொடர் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற கடைசி உலகக் கோப்பை என்பதால், வரலாற்று ரீதியாக இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
உருகுவே, இத்தாலியைத் தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை பிரான்ஸ் பெற்றது. 1938 ஜூன் 4 முதல் 19 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்தத் தொடரில் 16 அணிகள் தகுதிபெற்று 15 அணிகள் போட்டியில் பங்கேற்றன. மொத்தமாக 18 போட்டிகள் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
ஐரோப்பாவில் நிலவிய கடுமையான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தொடர் நடைபெற்றது. ஜெர்மனி நாஜிக்கள் படை ஆஸ்திரியாவை ஆக்கிரமித்ததால், தகுதி பெற்றிருந்த ஆஸ்திரியா அணி தொடரிலிருந்து விலகியது. இதனால் 16 அணிகளுக்குப் பதிலாக 15 அணிகளே விளையாடின. ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் நடந்ததால், அடுத்த இடத்திலிருந்த அவர்களாலும் தொடரில் பங்கேற்க முடியவில்லை.
முந்தைய உலகக் கோப்பை ஐரோப்பாவில் (இத்தாலி -1934) நடந்ததால், இந்த முறை தென் அமெரிக்காவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஐரோப்பாவிலேயே (பிரான்ஸ்) நடத்தப்பட்டதால் அதிருப்தியடைந்த உருகுவே மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற முன்னணி நாடுகள் இந்தத் தொடரைப் புறக்கணித்தன. தென் அமெரிக்காவிலிருந்து பிரேசில் மட்டுமே பங்கேற்றது.
இன்றைய இந்தோனேஷியா, அன்று “டச்சு கிழக்கிந்தியத் தீவுகள்” என்ற பெயரில் பங்கேற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் பங்கேற்ற முதல் ஆசிய நாடு இதுவே.
இந்தத் தொடரில் லீக் போட்டிகள் கிடையாது. நேரடியாக நாக்-அவுட் (Round of 16) முறையிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன.
1938 ஜூன் 19 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஸ்டேட் ஒலிம்பிக் டி கொலம்பஸ் திடலில் (Stade Olympique de Colombes) இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இத்தாலி, பலம் வாய்ந்த ஹங்கேரி அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இத்தாலி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இத்தாலி அணியின் ஜினோ கோலாஸ்ஸி மற்றும் சில்வியோ பியோலா ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை (1934 & 1938) கோப்பையை வென்று தக்கவைத்த முதல் நாடு என்ற பெருமையை இத்தாலி பெற்றது.
இத்தாலியின் பயிற்சியாளர் விட்டோரியோ போஸோ (Vittorio Pozzo), இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற ஒரே பயிற்சியாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாத ஒன்றாக வரலாற்று பதியப்பட்ட பெருமையையும் பெற்றிருக்கிறார் போஸோ.
1939 ஆம் ஆண்டு உலகப் போர் மூண்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் போரில் களமிறங்கின. உலகளவில் பெரும் பதற்றம் உருவாகியது. 1942 உலகக் கோப்பை நடைபெற்றதா?
- தொடரும்
In 1938, in France, Italy entered the FIFA World Cup as defending champions and finished the tournament with a win over Hungary in the final. Their run included a series of tough knockout matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.