இங்கிலாந்துக்கு வீசிய அதிர்ஷ்ட காற்று.. 2010 டி20 உலகக் கோப்பையில்..!
லீக்கில் ஒரு வெற்றிகூட பெறாமல் 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதைப் பற்றி...
பார்படாஸ், மே 16: 2010 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் லீக் சுற்றில் ஒரு வெற்றிகூட பெறாமல் இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
2010 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது. பிரதான அணிகள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகளுடன் 2009 தொடரில் விளையாடிய ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் நீக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் சேர்க்கப்பட்டன.
இந்த முறை லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுடன் ஒரு வெற்றிகூட பெறதாக பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
Advertisement
Advertisement
இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடியிருந்த இங்கிலாந்து அணி ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்ற நிலையில் ஒரேயொரு புள்ளியுடன் இரண்டாமிடம் பிடித்ததால் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. தொடக்கத்தில் இருந்த அதிர்ஷ்ட காற்று இங்கிலாந்து பக்கம் தொடர்ந்து வீசியது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் அடித்துப் பிடித்து சூப்பர் 8-ல் இடம்பெற்ற இங்கிலாந்து அணி, அதன் பின்னர் வேறு விதமாக விளையாடி அனைவரையும் ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தியது. சூப்பர் 8-ல் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்தது. அதேவேளையில் லீக் சுற்று, சூப்பர் 8 என ஆஸ்திரேலிய அணி தோல்வியே காணாமல் இறுதியை நோக்கி வேகமாக முன்னேறியது.
முதலாவது அரையிறுதியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
கோப்பையை வெல்லாத இரு அணிகளும் இறுதிக்கு முன்னேறியதால் பிரிஜ்டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. தொடர் முழுவதுமே தோல்வியைத் தழுவாத ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பொறுப்புடன் ஆடிய டேவிட் ஹஸ்ஸி 59 ரன்களும், கேமரூன் வைட் 30 ரன்களும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 27 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர், 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்தின் மைக்கேல் லம்ப் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின்னர், விக்கெட் கீப்பர் கிரெய்க் கீஸ்வெட்டர் 63 ரன்கள், கெவின் பீட்டர்சர் 47 ரன்கள் குவித்து இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணி முதல் முறையாகக் கோப்பையை வெல்ல உதவினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்து அசத்தினர்.
இங்கிலாந்து வீரர் கீஸ்வெட்டர் ஆட்டநாயகனாகவும், போட்டித் தொடர் முழுவதும் 248 ரன்கள் குவித்த கெவின் பீட்டர்சன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். முதல் கோப்பையை வசப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு 8 லட்சம் டாலர்களும், இரண்டாமிடம் பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 லட்சம் டாலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
(தினமணி கருவூலத்தின் உதவியுடன்...)
England surprised everyone by winning the World Cup for the first time in 2010, after going through the league stage without a single win.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.