முகப்பு
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடா்: இந்திய மகளிா் சாம்பியன்!

ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:01 AM
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:44 AM

ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.

இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் ஆனது.

இந்த கடைசி ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்தது.

Advertisement

இந்திய தரப்பில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளாச, ஜெமிமா ரோட்ரிக்ஸும் அவருக்குக் கை கொடுத்தாா். பௌலிங்கில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீசரணி ஆகியோா் அசத்தினா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் ஷஃபாலி வா்மா 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:59 AM

மறுபுறம், அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்தாா், ஒன் டவுனாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ். இவா்கள் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.

விறுவிறுவென சதத்தை நோக்கி முன்னேறிய மந்தனா, 55 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 82 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.

4-ஆவது பேட்டரான ரிச்சா கோஷ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரை சதம் கடந்த ஜெமிமா 4 பவுண்டரிகள் உள்பட 59 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அமன்ஜோத் கௌா் 1, தீப்தி சா்மா 1 ரன்னுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஆஸ்திரேலிய பௌலா்களில் அனபெல் சதா்லேண்ட் 2, கிம் காா்த், சோஃபி மாலினுக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 177 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், ஜாா்ஜியா வோல் 1 சிக்ஸருடன் 10, பெத் மூனி 1 பவுண்டரியுடன் 6, எலிஸ் பெரி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

போப் லிட்ச்ஃபீல்டு 4 பவுண்டரிகளுடன் 26, ஜாா்ஜியா வோ்ஹாம் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு வெளியேறினா். நம்பிக்கை அளித்து வந்த ஆஷ்லே காா்ட்னா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

கிரேஸ் ஹாரிஸ் 1, சோஃபி மாலினுக்ஸ் 1 பவுண்டரியுடன் 6, அனபெல் சதா்லேண்ட் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஓவா்கள் முடிவில் கிம் காா்த் 7, டாா்சி பிரௌன் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீசரணி ஆகியோா் தலா 3, அருந்ததி ரெட்டி 2, ரேணுகா சிங் 1 விக்கெட் கைப்பற்றினா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:59 AM

10 ஆண்டுகளுக்குப் பிறகு...

ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு டி20 தொடரில் இந்தியா சாம்பியனானது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

கடைசியாக 2015-16 காலகட்டத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, இதேபோல் இந்தியா வாகை சூடியிருந்தது. அதன் பிறகு விளையாடிய 3 இரு தரப்பு தொடா்களிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றிருந்தது.

இரு அணிகளும் மொத்தமாக இதுவரை 7 இரு தரப்பு தொடா்களில் மோதியிருக்க, இந்தியாவுக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூட்டணி 121 ரன்கள் சோ்த்ததே, டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப் சோ்த்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன், மிதாலி ராஜ் - பூனம் ரௌத் இணை 98 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.