ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீரர் / வீராங்கனை விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ், நியூசிலாந்து அணியின் ஜேக்கோப் டஃபி மற்றும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜஸ்டின் கிரீவ்ஸ்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான ஜஸ்டின் கிரீவ்ஸுக்கு கடந்த மாதம் மிகவும் சிறப்பான மாதமாக அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் 56.60 என்ற சராசரியுடன் 283 ரன்கள் குவித்தார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டைச் சதம் (202 ரன்கள்) விளாசி, அந்தப் போட்டியை டிரா செய்ய உதவினார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஜேக்கோப் டஃபி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜேக்கோப் டஃபி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவர் 15.43 என்ற சராசரியுடன் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 எனக் கைப்பற்றுவதற்கு ஜேக்கோப் டஃபி முக்கியப் பங்கு வகித்தார். தொடர் முழுவதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆண்டு ஒன்றில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். கடந்த ஆண்டில் மட்டும் அவர் 81 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் மிகவும் அபாரமாக செயல்பட்டார்.
கடந்த மாதத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகள் மற்றும் 139 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 8 விக்கெட்டுகள் மற்றும் 77 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கடந்த மாதத்தில் இந்த மூன்று வீரர்களும் அபாரமாக செயல்பட்டுள்ளனர். இவர்களில் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.