தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராக இந்திய அணிக்கு போதிய நேரம் இருக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை (ஜனவரி 11) நடைபெறுகிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் என்ன நடக்க வேண்டுமென இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும். அந்த விஷயங்களை என்னிடமிருந்து யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை. இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டு வீரராக இருக்கும் ஒருவர் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். போட்டிகளில் விளையாடும்போதும், என்ன நடக்கப் போகிறது என அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். அப்படி நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும்போது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும், நிகழ்காலத்தில் இருப்பது உங்களது வாழ்க்கையை எளிமையானதாகவும், அமைதியானதாகவும் மாற்றும்.
அணியில் கேப்டனாக இருக்கும்போது, காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியத சூழல் ஏற்பட்டால், அது ஒருபோதும் எளிமையான விஷயமாக இருக்காது. அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் விளையாடும்போது, கேப்டன் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாதது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
போதிய நேரமில்லை
சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்குத் தயாராக இந்திய அணிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை எனவும் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருந்தாலும், பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்திருக்காது. ஏனெனில், உலகெங்கிலும் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு தயாராக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு தொடருக்கு முன்பும், அந்த தொடருக்காக தயாராவது மிகவும் அவசியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களுக்குத் தயாராக எங்களுக்கு போதிய நேரம் இருந்ததாக நான் நினைக்கவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தவுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினோம். அப்போதும், அந்த தொடருக்குத் தயாராக போதிய நேரம் இருக்கவில்லை. வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடிவிட்டு அதன் பின் சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடும் சூழலில், அதற்கு தயாராவதற்கு வீரர்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.