பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வங்கதேசத்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியாவுக்கான ஓவா்கள் 49-ஆக குறைக்கப்பட, 48.4 ஓவா்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. அடுத்து வங்கதேச அணிக்கு 29 ஓவா்களில் 165 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, அந்த அணி 28.3 ஓவா்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக அபிஞான் குண்டூ 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 80, வைபவ் சூா்யவன்ஷி 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 72 ரன்கள் விளாசி வீழ்ந்தனா். வங்கதேச தரப்பில் அல் ஃபஹத் 5 விக்கெட் சாய்த்தாா்.
பின்னா் வங்கதேச அணியில் அதிகபட்சமாக, கேப்டன் அஸிஸுல் ஹகிம் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, ரிஃபாத் பெக் 37 ரன்கள் சோ்த்தனா். இந்திய பௌலா்களில் விஹான் மல்ஹோத்ரா 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான சுமுகமற்ற சூழல் காரணமாக, இந்த ஆட்டத்தில் டாஸின்போதும், ஆட்டத்தின் முடிவிலும் இரு அணி வீரா்களும் கை குலுக்கவில்லை.
இலங்கை வெற்றி: இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 8-ஆவது ஆட்டத்தில் இலங்கை 203 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.