இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை நினைத்து யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். முதல் டி20 மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் அவர் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். முதல் டி20 போட்டியில் 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த அவர், மூன்றாவது டி20 போட்டியில் 20 பந்துகளில் 68* ரன்கள் எடுத்தார்.
சுனில் கவாஸ்கர் கூறுவதென்ன?
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டங்களாக பார்க்க வேண்டும் எனவும், டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ளாது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் போன்றவை. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் பிரதான உணவுக்கு முன்பு பசியைத் தூண்ட சாப்பிடும் உணவு போன்றது. பிரதான உணவு பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்டதால், உலகக் கோப்பையை எப்படி தக்கவைப்பது என்பதில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் முழுமையாக தயாராக உள்ளார்கள். இந்திய அணியில் உள்ள சில வீரர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டாப் ஆர்டர் பேட்டர்களே ஆட்டத்தை முடித்துவிடுகிறார்கள். இதிலிருந்து இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரை எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. டி20 உலகக் கோப்பையை வெல்வதில் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசியுள்ள யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பது மிக மிக கடினம். இரண்டு ஓவர்களில் அரைசதம் விளாசுவது மிகவும் கடினம். ஆனால், கடந்த சில போட்டிகளாக யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்கும் திறன் தனக்கு இருக்கிறது என்பதைப் போல் அதிரடியாக அரைசதம் விளாசினார் அபிஷேக் சர்மா. அவர் 14 பந்துகள் மற்றும் 16 பந்துகளில் முறையே அரைசதம் விளாசியுள்ளார். அவர் யுவராஜ் சிங்கின் சாதனையை நெருங்கி வருகிறார். அபிஷேக் சர்மாவை நினைத்து யுவராஜ் சிங் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என நினைக்கிறேன். தன்னுடைய சாதனையை தன்னால் பயிற்சியளிக்கப்பட்ட அபிஷேக் சர்மா முறியடிப்பதை யுவராஜ் சிங் ஒருபோதும் தவறாக நினைக்கப் போவதில்லை என்றார்.
சர்வதேச டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ள நிலையில், அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.