மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி போலண்ட் பார்க் திடலில் நேற்று (ஜனவரி 27) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் ஷிம்ரன் ஹெட்மேயர் அதிகபட்சமாக 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரோவ்மன் பௌவல் 29 ரன்களும், பிரண்டன் கிங் 27 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ராஸ்டன் சேஸ் 22 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேசவ் மகாராஜ் மற்றும் கார்பின் போஸ்ச் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மார்க்ரம் அதிரடி; தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லுஹான் டி பிரிடோரியஸ் மற்றும் கேப்டன் அய்டன் மார்க்ரம் அணிக்கு அபார தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. லுஹான் டி பிரிடோரியஸ் 28 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் அய்டன் மார்க்ரமுடன் ரியான் ரிக்கல்டான் ஜோடி சேர்ந்தார். ரிக்கல்டான் நிதானமாக விளையாட, மார்க்ரம் அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அய்டன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ரியான் ரிக்கல்டான் 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜார்ஜ் லிண்டேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.