நான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே எனது ஒரே நோக்கம்: ரகுவன்ஷி
தான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே தன்னுடைய ஒரே நோக்கம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
தான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே தன்னுடைய ஒரே நோக்கம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் இன்று (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடங்கும் முன்பே முக்கிய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகினர். காயம் காரணமாக வீரர்கள் விலகியதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். அந்த அணியில் ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப் இருவரும் விலகியுள்ளனர். மதீஷா பதிரானா ஆரம்பக் கட்ட போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே தன்னுடைய ஒரே நோக்கம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டிய தேவை உருவானபோது, நான் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விக்கெட் கீப்பராக செயல்பட்டேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட தயாராக இருக்கிறேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். நாளுக்கு நாள் என்னால் முடிந்த வரை என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்கிறேன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுவது கற்றுக் கொள்வதில் எனக்கு மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவருக்கும் மிகப் பெரிய அனுபவத்தை தரப்போகிறது. நான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே எனது ஒரே நோக்கம் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை (மார்ச் 29) நடைபெறும் அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.