தப்பித்தது டெல்லி; தடுமாறும் பஞ்சாப்!
ஐபிஎல் போட்டியின் 55 -ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
ஐபிஎல் போட்டியின் 55 -ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.
தோற்றால் வெளியேறும் நிலையில் இருக்கும் டெல்லி, தட்டுத் தடுமாறி வென்று இந்த ஆட்டத்தில் தப்பித்தது. மறுபுறம், ஒரு கட்டத்தில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பஞ்சாப், தற்போது தொடர்ந்து 4 -ஆவது தோல்வியுடன் தடுமாறி வருகிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் சேர்க்க, டெல்லி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 216 ரன்கள் எடுத்து வென்றது.
Advertisement
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீசத் தயாரானது.
பஞ்சாப் இன்னிங்ஸில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் இணை, முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது.
பிரப்சிம்ரன் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் வந்தார். அதிரடியாக விளாசிய பிரியன்ஷ் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
4 -ஆவது பேட்டராக வந்த கூப்பர் கானலி, ஷ்ரேயஸýடன் கை கோத்தார். விக்கெட் சரிவைத் தடுத்த இவர்கள் கூட்டணி, 3 -ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. இதில் கானலி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களுக்கு வெளியேற, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 1, சஷாங்க் சிங் 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
ஓவர்கள் முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59, சூர்யன்ஷ் ஷெட்கே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பெளலர்களில் மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2, முகேஷ் குமார் 1 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து 211 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், அபிஷேக் பொரெல் 5, கே.எல்.ராகுல் 9, சஹில் பாரக் 13, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது டெல்லி.
5 -ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் அக்ஸர் படேல் - டேவிட் மில்லர் இணை, 64 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. அக்ஸர் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56, மில்லர் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களோடு 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆசுதோஷ் சர்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் சேர்க்க, முடிவில் மாதவ் திவாரி 18, ஆகிப் நபி 10 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், யஷ் தாக்குர் ஆகியோர் தலா 2, பென் டுவார்ஷுயிஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.