ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. இதையடுத்து பிரான்சு, ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின், ரஷியா, குரோஷியா, டென்மார்க், பிரேஸில், மெக்ஸிகோ, பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
முதல் சுற்றும் நாக் அவுட்டும்: முக்கிய அம்சங்கள்
* நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற 16 அணிகளில் ஆறு அணிகள் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவை.
பிரேஸில் - 5
ஆர்ஜென்டீனா - 2
உருகுவே - 2
ஃபிரான்ஸ் - 1
இங்கிலாந்து - 1
ஸ்பெயின் - 1
* முதல் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணி:
பெல்ஜியம் - 9
இங்கிலாந்து/ரஷியா - 8
குரோஸியா - 7
முதல் சுற்றில் அதிக கோல்கள் விட்டுக்கொடுத்த அணி:
பனாமா - 11
துனிசியா - 8
சவுதி அரேபியா - 7
* முதல் சுற்றில் உருகுவே மட்டுமே இதுவரை ஒரு கோலும் விட்டுக் கொடுக்கவில்லை. ஃபிரான்ஸ், டென்மார்க், குரோஸியா, பிரேஸில் ஆகிய அணிகள் 1 கோல் மட்டுமே விட்டுக் கொடுத்தவை.
* முதல் சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்
ஹென்றி கேன் (இங்கிலாந்து) - 5 கோல்கள் ( 2 ஆட்டங்கள்)
ரொமலு லுகாகு (பெல்ஜியம்) - 4 கோல்கள் ( 2 ஆட்டங்கள்)
கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுகல்) - 4 கோல்கள் (3 ஆட்டங்கள்)
டெனிஸ் செரிஷெவ் (ரஷியா) - 3 கோல்கள் ( 3 ஆட்டங்கள்)
டியகோ கோஸ்டா (ஸ்பெயின்) - 3 கோல்கள் ( 3 ஆட்டங்கள்)
* முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய அணிகள் அதாவது 3 ஆட்டங்களில் வென்று முழுப்புள்ளிகளையும் (9 புள்ளிகள்) பெற்ற அணிகள்:
உருகுவே, குரோஸியா, பெல்ஜியம்: 3 வெற்றிகள், 9 புள்ளிகள்.
குறைந்த புள்ளிகளுடன் நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற அணிகள்:
ஆர்ஜென்டீனா - 4 புள்ளிகள்
ஜப்பான் - 4 புள்ளிகள்
ஆதிக்கம் செலுத்தும் கண்டங்கள்
* நாக் அவுட்டுக்கு 10 ஐரோப்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 14 அணிகளில் 4 மட்டுமே வெளியேறியுள்ளன.
பெல்ஜியம், குரோஸியா, டென்மார்க், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், போர்ச்சுகல், ரஷியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து ஆகிய 10 ஐரோப்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, செர்பியா ஆகிய 4 ஐரோப்பிய அணிகள் வெளியேறியுள்ளன.
* கால்பந்து உலகக் கோப்பைக்கு எப்போதுமே தனி வண்ணம் அளிப்பவர்கள், தென் அமெரிக்க வீரர்கள். இந்தமுறை கலந்துகொண்ட 5 அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன.
ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க அணிகள் தகுதி பெற்ற நிலையில் பெரு மட்டும் வெளியேறியுள்ளது.
* ஆசிய அணிகளின் பங்களிப்பு எப்போதுமே கால்பந்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படும். இந்தமுறை 5 அணிகள் தகுதி பெற்றதில் ஒரே ஓர் அணி மட்டுமே நாக் அவுட்டுக்குச் சென்றுள்ளது. அதாவது தென் அமெரிக்க நிலைக்கு இது அப்படியே தலைகீழ்.
ஜப்பான் மட்டுமே தகுதி பெற, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா (ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் ஓர் அங்கம்) ஆகிய ஆசிய அணிகள் வெளியேறியுள்ளன.
* வட அமெரிக்க நாடுகளில் ஒரு நாடு மட்டுமே அடுத்தச் சுற்றுக்குச் செல்கிறது.
கோஸ்டா ரிகா, பனாமா ஆகிய வட அமெரிக்க நாடுகள் வெளியேறியுள்ளன. மெக்ஸிகோ மட்டுமே நாக் அவுட்டில் விளையாடுகிறது.
* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிர்ச்சிய ஏற்படுத்துவதில் ஆப்பிரிக்க நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் இந்தமுறை மிகப்பெரிய ஏமாற்றம்.
எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா என ஐந்து ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றதில் ஒன்றுகூட காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. 1982-க்குப் பிறகு இப்போதுதான் எந்தவொரு ஆப்பிரிக்க அணியும் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இது மிகப்பெரிய விவாதமாக உருவாகியுள்ளது.
நீயா நானா போட்டியின் வரலாறு
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்குபெறும் அணிகள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் மோதியபோது நடந்தது என்ன?
* போர்ச்சுகல் vs உருகுவே, ஸ்பெயின் vs ரஷியா, குரோஷியா vs டென்மார்க், ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து - இதுவரை உலகக் கோப்பைப் போட்டியில் இந்த அணிகள் மோதிக்கொள்ளவேயில்லை. முதல்முறையாக மோதவுள்ளதால் கடுமையான போட்டிக்குப் பஞ்சம் இருக்காது.
பிரான்சு vs ஆர்ஜென்டீனா - இருமுறை மோதியதில் ஆர்ஜென்டீனாவே வென்றுள்ளது.
பிரேஸில் vs மெக்ஸிகோ - 4 ஆட்டங்களில் மூன்றில் பிரேஸில் வென்றுள்ளது.
பெல்ஜியம் vs ஜப்பான் - ஒருமுறை மோதிய ஆட்டம் டிரா ஆகியுள்ளது.
கொலம்பியா vs இங்கிலாந்து - ஒருமுறை மோதிய ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது.
இதர அம்சங்கள்
* குரூப் ஹெச் பிரிவில் ஜப்பான், செனகல் ஆகிய இரு அணிகளும் ஒரு புதிரான நிலையை நேற்று உருவாக்கின. இதனால் முதல் சுற்று பரபரப்புடனும் சர்ச்சையுடனும் முடிந்தது.
இரு அணிகளும் 4 புள்ளிகளுடன் 4 கோல்களை அடித்து 4 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளன. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிய ஆட்டமும் சமனில் முடிந்தது. இப்படி எல்லாமே சம அளவில் இருந்ததால் நன்னடத்தை விதிகளின்படி, செனகல் ஆறு மஞ்சள் அட்டைகள் பெற்றிருந்த நிலையில் 4 மஞ்சள் அட்டைகள் மட்டுமே பெற்ற ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுபோல தகுதி பெற்ற முதல் அணி என்கிற பெருமையை அடைந்துள்ளது ஜப்பான் அணி. தனது கடைசி ஆட்டத்தில் கடைசி 10 நிமிடங்களில் இதனை அறிந்த ஜப்பான் வீரர்கள் கோலடிக்க முயற்சி செய்யாமல் தற்காப்பு உத்தியுடன் விளையாடியது பார்வையாளர்களை வெறுப்பேறியது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுபோல ஓர் அணி எவ்வித லட்சியமும் இன்றி விளையாடுவது இழுக்கு என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
* முதல் சுற்றில் எகிப்து vs சவுதி அரேபியா, துனிசியா vs பனாமா ஆகிய இரு ஆட்டங்கள் மட்டுமே நாக் அவுட்டுக்குப் பயன்படாத ஆட்டங்கள். மற்றபடி இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளும் குறைந்தது 2 கோல்களையாவது அடித்தன. உலகக் கோப்பை வரலாற்றில் இது முதல்முறை.
சவுதி அரேபியா, எகிப்து, போலந்து, ஈரான், மொராக்கோ, டென்மார்க், பெரு, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா, ஜெர்மனி, பனாமா ஆகிய 13 அணிகள் இந்தப் போட்டியில் குறைந்த கோல்கள் அடித்தவை. அனைத்துமே 2 கோல்கள் அடித்தன. இதில் டென்மார்க் மட்டும் 2
கோல்கள் மட்டுமே அடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
* நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. அதன் அட்டவணை:
காலிறுதிக்கு முந்தைய சுற்று
ஜூன் 30
பிரான்சு vs ஆர்ஜென்டீனா (இந்திய நேரம் இரவு 7.30 மணி)
போர்ச்சுகல் vs உருகுவே (இரவு 11.30 மணி)
ஜூலை 1
ஸ்பெயின் vs ரஷியா (இரவு 7.30 மணி)
குரோஷியா vs டென்மார்க் (இரவு 11.30 மணி)
ஜூலை 2
பிரேஸில் vs மெக்ஸிகோ (இரவு 7.30 மணி)
பெல்ஜியம் vs ஜப்பான் (இரவு 11.30 மணி)
ஜூலை 3
ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து (இரவு 7.30 மணி)
கொலம்பியா vs இங்கிலாந்து (இரவு 11.30 மணி)
இதன்பிறகு காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 6 முதல் தொடங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.