நேற்று நடந்த கொல்கத்தா - மும்பை இடையேயான ஐபிஎல் போட்டியில் அனைவருடைய கவனமும் சுனில் நரைன் மீதுதான் இருந்தது. முறையற்ற பந்துவீச்சுக்காக அவருக்கு சிலகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இப்போது தடை நீக்கப்பட்ட நிலையில் புதிய பந்துவீச்சு முறையில் அவர் எப்படி வீசப்போகிறார் என்கிற ஆவல் அனைவருக்கும் இருந்தது.
பவர்பிளே முடிந்தபிறகு 7-வது ஓவரின்போது பந்துவீச வந்தார் நரைன். எப்படி பந்துவீசுவார், முன்புபோல ஆதிக்கம் செலுத்துவாரா? மீண்டும் நடுவர்கள் புகார் கூறினால் என்ன ஆவது என்கிற பல கேள்விகளுடன் ரசிகர்கள் நரைனின் பந்துவீச்சை ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட அதே பந்துவீசும் முறைதான். இப்போது முழங்கையை சரியான கோணத்தில் சுற்றுகிறார். இனி இவர் பந்துவீச்சைக் கேள்வி கேட்கமுடியாது என்றுதான் தோன்றியது. ரோஹித் சர்மாவுக்கு வீசிய முதல் பந்து புல்டாஸாக மாறி பவுண்டரிக்குப் போனது. அதற்கடுத்த 5 பந்துகளில் ஒரு ரன் தான் கொடுத்தார்.
2வது ஓவரில் இன்னும் கவனமாக வீசினார். ரோஹித் சர்மாவும் ஆண்டர்சனும் உஷாராக ஆடினார்கள். அந்த ஓவரில் 3 ரன்கள்தான். பிறகு சிறு ஓய்வுக்குப் பிறகு 14-வது ஓவரை வீச வந்தார். புதிய பந்துவீச்சு முறை நரைனுக்கு எவ்விதத்திலும் பலவீனமாக இல்லை. ஆனால், அசால்டாக வீசுவாரே அந்த ஒரு மனநிலை இல்லாதது போல இருந்தது. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல சீரியஸாகவே இருந்தார். கவனம் முழுவதும் பந்துவீச்சில் இருந்தது. மீண்டும் தன்னைக் கேள்விக்குளாக்குவார்களோ என்கிற தயக்கம் அவரது உடல்மொழியில் காணப்பட்டது. 3-வது ஓவரில் நான்கு ரன்கள் தான் கொடுத்தார்.
17-வது ஓவரில் தன்னுடைய கடைசி ஓவரை வீசவந்தார். அதுவரை 3 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 3-வது பந்தில் ஏறி வந்து பந்தை அடிக்க முயன்றார் ரோஹித். ஆனால், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆக சென்றது. இதை எதிர்பாராத உத்தப்பா, கேட்ச்சை நழுவவிட்டார். அதற்கடுத்த இரண்டு பந்துகளிலும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தார் ரோஹித் .
கடைசியில் 4 ஓவரில் 28 ரன்கள் கொடுத்து தன் ஓவர்களை முடித்துக்கொண்டார். விக்கெட் எதுவுமில்லை. வழக்கமாக 6 ரன்களுக்குக் குறைவாகவே ரன்கள் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த மேட்ச், நரைனுக்கு ஒரு அமிலத் தேர்வு. இதிலும் ஏதாவது சிக்கல் நேர்ந்திருந்தால் அவருக்கு மட்டுமல்ல, கொல்கத்தா அணிக்கே அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், எந்த ஒரு சர்ச்சையும் இன்றி தன் கடமையை முடித்தார் நரைன்.
கிரிக்கெட் நிபுணர் சைமன் ஹியூஸ், “இந்தப் புதிய பந்துவீச்சு முறையில் நரைன் முன்பு போல அச்சுறுத்தலாக இல்லை” என்று ட்வீட் செய்தார். “சுனில் நரைனின் ஆக்ஷன் மாறினாலும் ஹேர்ஸ்டைல் மாறவில்லை. விக்கெட் எடுக்கும் திறமை... இனிமேல் தான் பார்க்கவேண்டும்” என்றார் மற்றொரு கிரிக்கெட் நிபுணரான மேமன். ஹர்ஸா போக்ளேவும் நரைனின் தயக்கத்தைப் பற்றி வர்ணனையில் குறிப்பிட்டார்.
மேட்ச் முடிந்தபிறகு நரைனின் பந்துவீச்சு பற்றி கம்பீர் கூறும்போது, “இதற்கு முன்னால் அவருக்கு நடந்ததை வைத்துப் பார்க்கும்போது இந்த மேட்சில் நரைன் நன்றாகவே பந்துவீசினார். இந்த பிட்ச், சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இல்லை. இருந்தும் 4 ஓவர்களையும் கட்டுக்கோப்பாக வீசினார். இது அவருடைய மனபலத்தை வெளிப்படுத்துகிறது. அவர் சிறிது சிறிதாக இயல்புக்கு வரவேண்டும் என்று விரும்புகிறோம். அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை. அழுத்தம் தரவும் விரும்பவில்லை. சுனில் நரைன் நேராக பந்துவீசினாலே எதிரணியிருக்கு அச்சுறுத்தலாக இருப்பார்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.