நேற்று (புதன்) பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. பெங்களூர் அணி மட்டுமே 20 ஓவர்கள் ஆடியது. பேட்டிங் செய்ய ராஜஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தப் போட்டியின் மூலமாக கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்துள்ளார், ஆர்சிபி அணியைச் சேர்ந்த 17 வயது சர்ஃபராஸ் கான்.
மும்பையைச் சேர்ந்த இவரை, ஆர்சிபி அணி, ஏலத்தில் 50 லட்சம் ரூபாய்க்குத் தேர்ந்தெடுத்தது. இவருக்கு முன்னால் பிரதீப் சங்வான், உன்முக்த் சந்த் ஆகியோர் ஐபிஎல்-லின் இளம் வீரர்களாக இருந்தார்கள். 17 வயது 177 நாள்களில் முதல் ஐபிஎல் போட்டியை ஆடியதன் மூலம் ஐபிஎல்-ன் இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
பேட்டிங் மூலம் கவனம் பெறுவதற்கு முன்பு சர்ச்சை செய்தி ஒன்றில் இடம்பெற்றார் சர்ஃபராஸ் கான். கொல்கத்தா வீரர் உத்தப்பா, இவரைத் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதைப் பற்றி பிறகு யாரும் நேரடியாக கருத்து எதுவும் சொல்லவில்லை.
பெங்களூருவில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், சர்ஃபராஸ் கான் அதிரடியாக ஆடி அனைவரையும் கவர்ந்தார். 21 பந்துகளில் 45 ரன்கள். 18-வது ஓவரில் பிரவீண் டாம்பே பந்தில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தபோது பெங்களூரு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள். பலரும் அந்தக்கால சச்சினைப் பார்ப்பதுபோல இருந்தது என்றார்கள். மியாண்டட் சிறிய வயதில் இப்படித்தான் ஆடுவார் என்கிற பாராட்டும் கிடைத்தது.
ஆர்சிபி இன்னிங்ஸ் முடிந்தபிறகு பெவிலியன் நோக்கி வந்த சர்ஃபராஸ் கானுக்கு ஆர்சிபி வீரர்கள் சிலர் கைத்தட்டி மரியாதை செலுத்தினார்கள். கேப்டன் கோலி, ஆடுகளத்தின் உள்ளே வந்து சர்ஃபராஸூக்குப் பாராட்டும் மரியாதையும் செலுத்தினார். அப்போது ஆர்சிபி அணி வீரர்கள் உற்சாகமான மனநிலையில் இருந்தார்கள்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி ஆகியோர் சர்ஃபராஸ் கானைக் குறிப்பிட்டு ட்வீட் செய்தார்கள். இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற இளம் வீரரை பெரிய போட்டிகளில் பார்க்கமுடியும் என்றார் டாம் மூடி.
ஐபிஎல்-லில் நிறைய இளம் வீரர்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள். அதில் முக்கால்வாசி பேர் அடுத்தக் கட்டத்துக்கு நகரமுடியாமல் தவித்தவர்கள். சர்ஃபராஸ் கான் இந்தப் பேர், புகழை எப்படி மேலே கொண்டு செல்லப்போகிறார் என்பது சில வருடங்களில் தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.