இந்த ஐபிஎல்-லில் ரவீந்திர ஜடேஜா மிக மோசமாக ஆடிவருகிறார். நினைத்த மாதிரி ரன்னும் அடிக்கமுடியவில்லை. விக்கெட்டும் எடுக்கமுடியவில்லை.
ஆடிய 10 மேட்சுகளில் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். ரன் விகிதம் 8.37. பேட்டிங் இன்னும் மோசம். 10 மேட்சுகளில் 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 24 ரன்கள்! ஸ்டிரைக் ரேட் 100 கூட இல்லை. 95.19! ஐபிஎல் பேட்ஸ்மேன்களில் வேறு யாருக்கும் இந்தளவு குறைந்த ஸ்டிரேக் ரேட் கிடையாது. கடைசிக்கட்ட ஓவர்களில் ஆடுபவர், சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவராக இருக்கவேண்டும். ஆனால் ஜடேஜா இதுவரை 2 சிக்ஸர்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த ஆதாரங்களை வைத்து அவர் சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளார் என்பதை அறிந்துகொள்ளமுடியும். கடந்த 2 மேட்சுகளிலேயே அவர் இடம்பெறமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வருகிறார். பாபா அபரஜித் மாதிரியான திறமையான வீரர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காத போது ஜடேஜாவுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்குமா சென்னை அணி?
அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இதற்குப் பதிலளிக்கிறார்.
"ஜடேஜா ஃபார்முக்கு வரவேண்டும். அவரிடம் திறமை உள்ளன. அவரால் அணிக்குப் பங்களிக்கமுடியும் என நாங்கள் எண்ணுகிறோம். ஃபார்மில் இல்லாத வீரர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிடுவார்கள். சரியாக ஆடாத வீரர்களை கண்டபடி மாற்றுவது ஐபிஎல்-லில் உதவும் என நான் நினைக்கவில்லை. சிலசமயம் அது மோசமான விளைவையும் ஏற்படுத்தும். ஜடேஜா அருமையான ஃபீல்டர் என்பதால் சில அருமையான ரன் அவுட்களைச் செய்துள்ளார். அவரை அணியிலிருந்து நீக்குவதை விட அவருடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.
மைக்கேல் ஹஸ்ஸியை நாங்கள் இன்னும் பயன்படுத்தாதற்குக் காரணம், வெற்றிக் கூட்டணியை மாற்ற விரும்பவில்லை என்பதுதான். மேட்சுக்கான உடற்தகுதியால், போட்டியின் பாதியில் திடீரென ஒரு வீரரை உள்ளே கொண்டுவர விரும்பவில்லை. ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக 11 பேர் அடங்கிய வெற்றிக்கூட்டணியைத் தொடர்வதில் சமரசம் செய்வதாக இல்லை. இதனால் மைக்கேல் ஹஸ்ஸி, வெற்றியை அளிக்கக்கூடியவர் இல்லை என்று அர்த்தம் கிடையாது. ஆனால், அணியின் பங்களிப்பு சரியாக இருக்கிறது. அதை மதிக்கவேண்டும். மெக்கல்லம் நியூசிலாந்துக்குத் திரும்பிச் செல்லும்போது ஹஸ்ஸி அல்லது மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.