நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார் பார்தீவ் படேல். ஆர்சிபி அணி முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. அப்போது 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார் பார்தீவ் படேல். இதனால் ஆர்சிபி அணி கடைசியாக 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுப்பதற்கு வலுவான அடித்தளம் அமைத்துத் தந்தார் பார்தீவ்.
பிரபல நட்சத்திரங்கள் உள்ள ஆர்சிபி அணியில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார் பார்தீவ் படேல். அவற்றைப் பார்க்கலாம்.
* பார்தீவ் படேலின் சம்பளம் ரூ. 1 கோடியே 70 லட்சம். மற்ற அணிகளுடன் ஏன் ஒப்பிடவேண்டும், ஆர்சிபி அணியிலேயே 13 வீரர்களுக்கு இவரை விடவும் அதிகச் சம்பளம். ஆனால் பங்களிப்பில் விராட் கோலி, டி வில்லியர்ஸுக்கு அடுத்ததாக மூன்றாவது சிறந்த வீரராக உள்ளார் பார்தீவ் படேல். இதனால் பார்தீவ் படேலின் தேர்வைப் பொறுத்தவரை ஆர்சிபி அணிக்குக் சின்னக் கல்லு, பெரிய லாபம் கதைதான்.
* இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார் பார்தீவ் படேல். 11 ஆட்டங்களில் 326 ரன்கள். இவரை விடவும் ரிஷப் பந்த் அதே அளவு ஆட்டங்களில் 10 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்துள்ளார்.
* ஸ்டிரைக் ரேட்டில் கோலியை விடவும் அதிகம். பார்தீவ் படேல் - 135.83 , விராட் கோலி - 134.68. கோலி அடித்த 8 சிக்ஸர்களை விடவும் ஒன்று கூடுதலாக அடித்துள்ளார் பார்தீவ்.
* இந்த வருடம் இருமுறை ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுத்துள்ளார் பார்தீவ் படேல். ஆர்சிபி அணியின் வலுவான பேட்ஸ்மேன்களான கோலியோ டி வில்லியர்ஸோ இந்தளவுக்கு ஒரே ஓவரில் அதிக ரன்களை எடுத்ததில்லை.
* 34 வயது பார்தீவ் படேலின் தந்தை அஜய் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பிப்ரவரி மாதம் முதல் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இந்த வருட ஐபிஎல்-லின்போது ஆர்சிபியின் ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்பும் அஹமதாபாத்துக்கு உடனடியாகப் பறந்து சென்று தந்தையின் சிகிச்சை குறித்து விசாரித்து வருகிறார் பார்தீவ் படேல். பிறகு அடுத்த நாள் அணியின் வலைப்பயிற்சியில் கலந்துகொள்வார். இதனால் ஓயாத விமானப் பயணங்களிடையே தான் இந்த ஐபிஎல்-லில் விளையாடி வருகிறார். தந்தையின் தற்போதைய நிலைமையினால் ஐபிஎல்-லில் விளையாட மறுத்துள்ளார் பார்தீவ் படேல். ஆனால், கிரிக்கெட் விளையாடுவதையே அவர் தந்தை விரும்புவார் என்பதால் மிகுந்த மன வேதனை, பிரார்த்தனைகளுக்கிடையே ஐபிஎல் போட்டியில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல் அணியின் வெற்றிகளுக்கும் பெரிதளவில் பங்களித்து வருகிறார் பார்தீவ் படேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.