5 ஆண்டுகளில் முதல் அரைசதம்: மேக்ஸ்வெல் அதிரடியால் பெங்களூரு 149 ரன்கள் குவிப்பு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களமிறங்கினர். 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த படிக்கல் 11 ரன்களுக்கு புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் கோலி துரிதமாக ரன் சேர்க்க புதிதாகக் களமிறங்கிய ஷபாஸ் அகமது சற்று அதிரடி காட்டினார். இதனால், பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது.
ஆனால், பவர் பிளே முடிந்தவுடன் முதல் பந்திலேயே ஷபாஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கேப்டன் கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டியது. இதனால், முதல் 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
ஷபாஸ் நதீம் வீசிய 11-வது ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி, கோலி 1 பவுண்டரி விளாச 22 ரன்கள் கிடைத்தன. இதனால், ரன் ரேட் சற்று உயர்ந்தது.
பெரிய இன்னிங்ஸுக்கு அடித்தளம் போட்ட கோலி, 33 ரன்களுக்கு ஹோல்டர் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் ஏபி டி வில்லிர்ஸும் 1 ரன்னுக்கு ரஷித் சுழலில் ஆட்டமிழந்தார்.
இதனால் ரன் ரேட்டில் மீண்டும் சரிவு ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களுக்கும், டேன் கிறிஸ்டியன் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
மேக்ஸ்வெல் மட்டும் கடைசி கட்ட அதிரடிக்கு களத்தில் இருந்தார். ஜேமிசன் புவனேஷ்வர் குமார் வேகத்தில் 2 பவுண்டரிகள் அடித்து ஆறுதல் அளித்தார்.
மறுமுனையில் நடராஜன் வேகத்தில் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் அடித்தார்.
ஹோல்டர் வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனிடையே அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தனது முதல் அரைசதத்தையும் எட்டினார்.
ஆனால், கடைசி பந்தில் அவர் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க அந்த அணியால் 150 ரன்களைக் கடக்க முடியவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
ஹைதராபாத் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஷபாஸ் நதீம், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.