ஜியோ ஹாட்ஸ்டார் பேட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திக் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார்.
பேட்டிங்கில் சிறப்பாக மாறியதற்கு காரணம் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் எனக் கூறியுள்ளார். குறிப்பாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டிரெண்ட் போல்ட் ஓவரில் அடித்த ஷாட்டுகள் குறித்தும் பேசியுள்ளார்.
ஐபிஎல் பயணம், தினேஷ் கார்த்திக்கின் தாக்கம் ஒரு வீரராக தன் வளர்ச்சியைக் குறித்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் விக்கெட் கீப்பர்- பேட்டர் ஜிதேஷ் சர்மா, ஜியோ ஹாட்ஸ்டாரின் சிறப்பு தொடரான “ஜென் போல்ட்” நிகழ்ச்சியில் பேசியதாவது:
என்னைப் போலவே சிந்திக்கும் தினேஷ் கார்த்திக்
நான் உண்மையிலேயே என்னுடைய சிந்தனைக்கு ஏற்ப ஒரு நபரை கடைசியாக கண்டுபிடித்திருக்கிறேன். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொள்கிறேன்.
என் அலைவரிசையைப் பூர்த்தி செய்யக்கூடியவரும் என்னை மாதிரியே இருப்பவரும் அந்த நபர்தான் டி.கே (தினேஷ் கார்த்திக்) அண்ணா. அவர்தான் எனது தெளிவான சிந்தனைக்கு ஒரு பெரிய காரணமாக இருக்கிறார்.
இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பங்கு வகித்த அவருடன் பேச எனக்கு முழு சுதந்திரம் உள்ளது.
டிகே என்னுடைய உணர்வுகளையும் விளையாட்டையும் புரிந்துகொள்கிறார். அவரின் வார்த்தைகளை நானும் புரிந்துகொள்கிறேன்.
எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்கிறேன்
அழுத்தமான நேரங்களில் தினேஷ் கார்த்திக் எப்படி விளையாடியிருக்கிறார், அந்தத் தருணங்களில் எவ்வளவு அபாயம் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியும்.
இதற்கு முன்பு யாருடனும் நான் இப்படி பேச முடியவில்லை. ஏனெனில் நம்பர் 6-இல் விளையாடி வெற்றி பெற்றவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானோர் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பெரிய அணிகளில் விளையாடுபவர்கள்.
இப்போது, நான் டி.கே-வை தினமும் சந்திக்கிறேன். அவரும் விக்கெட் கீப்பர்-பேட்டராக இருந்ததால், அவர் என்னை நன்றாகாப் புரிந்துகொள்கிறார். நானும் அவருடைய எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்கிறேன்.
எனக்கு ஆர்சிபியில் அதிக சுதந்திரம் உள்ளது. முன்பு எனது பழைய அணியிலும் இருந்தது. ஆனால் இப்போது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இது எனக்குப் புதிதாக இருக்கிறது.
வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்
டிகே என்னை எனது சௌகரியமான சூழலில் இருந்து வெளியே இழுத்தார். எனக்கு குறிப்பாக நேராக அடிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிதான் வளர்ந்தேன்.
வித்தியாசமான ஷாட்டுகள் பிடிக்காது. ஏனெனில், முன்பு பயிற்சியாளர்கள் ‘இப்படி அடி, நேராக விளையாடு’ எனக் கூறுவார்கள்.
இப்போதும் வி வடிவில் சிக்ஸர் அடிப்பதுதான் எனது பலமாக இருக்கிறது. ஆனால், தற்போது அதைவிடவும் கூடுதலான ஷாட்டுகளையும் விளையாடுவேன்.
என் இயல்பான கை இயக்கத்தை பயன்படுத்துமாறு டிகே அறிவுரை வழங்கினார்.
எனது திறமைகளை நம்பி என்னை புது விதமாக ஆடச் சொல்லி என்னை நம்ப வைத்தார். அதுவே எனது வளர்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தது எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.