ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை யூசுப் பதான் தன்வசம் வைத்திருந்த நிலையில், அதனை தற்போது சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் விளாசியிருந்த நிலையில், சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி அவரது சாதனையை முறியடித்தார்.
பாராட்டு மழையில் சூர்யவன்ஷி
ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சச்சின் டெண்டுல்கர்
வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். அவரது பேட்டின் வேகம், பந்தின் லென்த்தினை கணித்து சிறப்பாக விளையாடிய விதம் அவரது வெற்றியின் ரகசியம். கடைசியில் முடிவு 38 பந்துகளில் 101 ரன்கள். மிகவும் நன்றாக விளையாடினீர்கள் சூர்யவன்ஷி.
யூசுப் பதான்
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற என்னுடைய சாதனையை முறியடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது வாழ்த்துகள். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிபோது, இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது அவரது சதத்தினை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.
யுவராஜ் சிங்
நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி - இந்த பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். துளியும் அச்சமற்ற அதிரடியான ஆட்டம். உங்களது அதிரடியான ஆட்டத்தைப் பார்த்து பெருமையாக இருக்கிறது.
சூர்யகுமார் யாதவ்
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை. முற்றிலும் அதிரடியான ஆட்டம்.
முகமது ஷமி
வைபவ் சூர்யவன்ஷி, என்ன ஒரு அசாத்திய திறமை கொண்ட இளம் வீரர். 14 வயதில் சதம் விளாசுவது நம்பமுடியாத விதமாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள்.
மிதாலி ராஜ்
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தினைப் பார்த்தபோது, வரலாறு படைக்கப்படுவதை பார்ப்பது போன்று உணர்ந்தேன். 14 வயதில் 200-க்கும் அதிகமான இலக்கை எடுக்கவேண்டிய போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடினார். 35 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடினீர்கள்.
இயான் பிஷப்
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த இளம் வயதில் இப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை நம்ப முடியவில்லை.
இதையும் படிக்க: இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் பீட்டர்சன்
ஆரோன் ஃபின்ச்
இதுபோன்ற ஒரு ஆட்டத்தை இதற்கு முன்பாக நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? என்ன ஒரு திறமையான வீரர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.