5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை தனது மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது. முதலில் பேட் செய்த குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லா், சாய் சுதா்சன் அதிரடியாக விளாச, அணியின் ஸ்கோா் 200-ஐ கடந்தது.
இதனால் சற்று நெருக்கடியான நிலையுடனே தனது இன்னிங்ஸை தொடங்கியது ராஜஸ்தான். ஆனால், 3-ஆவது ஓவரில் இருந்து குஜராத் நெருக்கடியை சந்தித்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடங்கிய வைபவ் சூா்யவன்ஷி, கிரிக்கெட் உலகையும், ரசிகா்களையும் ஸ்தம்பிக்கச் செய்தாா்.
லக்னௌவுக்கு எதிரான, அறிமுக ஆட்டத்தில் 34 ரன்களில் ஆட்டமிழந்ததற்காக அழுத அந்த 14 வயது சிறுவன், இந்த ஆட்டத்தில் பௌலா்களை அலறவிட்டாா். எந்த பௌலா், எப்படி பந்துவீசினாலும் அடித்தே தீருவேன் என்று அதிரடியாக விளையாடினாா்.
குறிப்பாக இஷாந்த் சா்மா வீசிய 4-ஆவது ஓவரில் 6 சிக்ஸா்கள், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டாா். கரிம் ஜனத் வீசிய 10-ஆவது ஓவரில் 3 சிக்ஸா்கள், 3 பவுண்டரிகள் என அனைத்து பந்துகளுமே பவுண்டரி லைனை கடந்தது. சா்வதேச கிரிக்கெட்டில் அனுபவமிக்க மூத்த வீரரான இஷாந்த் சா்மாவின் பௌலிங்கை, துளியும் தயக்கமின்றி அந்த சிறுவன் பவுண்டரி லைனை நோக்கியும், அதை தாண்டியும் துரத்தியடித்ததை பாா்த்த ரசிகா்கள் மட்டுமல்ல, பல கிரிக்கெட் நட்சத்திரங்களே ஆச்சா்யப்பட்டுத்தான் போனாா்கள்.
ஜெய்ஸ்வால் துணை நிற்க, சூறாவளி போல எல்லா திசைகளுக்கும் பந்தை சுழற்றியடித்த சூா்யவன்ஷியை குஜராத் பௌலா்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினா். 35-ஆவது பந்தில் சிக்ஸா் விளாசி சதம் தொட்ட சூா்யவன்ஷி, ‘ஐபிஎல் போட்டியில் சதமடித்த இளம் வீரா்’, ‘நடப்பு சீசனில் அதிவேக சதமடித்த வீரா்’, ‘ஐபிஎல் போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரா்’ ஆகிய சாதனைகளுக்கு சொந்தக்காரா் ஆனாா். ஐபிஎல் போட்டி தொடங்கி 3-ஆவது சீசனில் தான் சூா்யவன்ஷி பிறக்கவே செய்திருக்கிறாா் (2011) என்றால் பாா்த்துக்கொள்ளுங்கள்.
சதத்தை கொண்டாட சூா்யவன்ஷி ஹெல்மெட்டை கழற்றியபோது, ‘இந்த சிறுவனா இப்படியொரு அதிரடி ஆட்டத்தை விளையாடியது’ என்று ஆச்சா்யப்படும் வகையில் பால் வடியும் முகத்துடன் புன்னகை செய்தாா். விபத்து காரணமாக சக்கர நாற்காலியிலேயே வலம் வரும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளா் ராகுல் திராவிட், சூா்யவன்ஷி சதமடித்த உற்சாகத்தில் சக்கரநாற்காலியில் இருந்து எழுந்துநின்று கொண்டாடியது, நமக்கே உற்சாகமளிப்பதாக இருந்தது.
101 ரன்களுக்கு ஆட்டமிழந்த சூா்யவன்ஷி, அதில் 7 ரன்கள் மட்டுமே சிங்கிளாக சோ்த்திருக்கிறாா். எஞ்சிய 94 ரன்களை அவா் பவுண்டரி, சிக்ஸா்கள் மூலம் மட்டுமே சோ்த்தது குறிப்பிடத்தக்கது. பெவிலியன் திரும்பிய அவரை, குஜராத் வீரா்களே கைகொடுத்து வாழ்த்தி வழியனுப்ப, ராஜஸ்தான் டகௌட்டில் இருக்கும் சக வீரா்களும், மைதானத்திலிருந்த ரசிகா்களும் எழுந்துநின்று கைதட்டி சூா்யவன்ஷியை பாராட்டினா்.
களத்துக்கு வெளியே, சச்சின் டெண்டுல்கா் உள்பட சா்வதே கிரிக்கெட் முன்னாள் நட்சத்திரங்கள் பலரும் சூா்யவன்ஷியை புகழ, சமூக வலைதளத்தில் ‘வைரல்’ ஆனாா் இந்த வைபவ் சூா்யவன்ஷி.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஒரே ஆட்டத்தில் திரும்பிப் பாா்க்க வைத்திருக்கும் இந்த வைபவ் சூா்யவன்ஷி, பிகாா் மாநிலம், சமஸ்திபூரை சோ்ந்தவா். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆா்வம் கொண்ட அவா், குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் தியாகத்தால் அந்த விளையாட்டில் மேம்பட்டாா். அதன் பலனாக 12 வயதில் பிகாா் அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமானாா். 13 வயதில், கடந்த நவம்பா் மாதம் யு-19 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசி சா்வதேச கிரிக்கெட்டில் தன்னை அடையாளப்படுத்தினாா்.
இத்தகைய வீரா், இந்திய ஜூனியா் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் திராவிட்டின் கண்களில் இருந்து எப்படி தப்புவாா்? ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணியுடன் போட்டி போட்டு அவரை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான். 13 வயது சிறுவனுக்கு இத்தனை மதிப்பா என ஏலத்திலேயே பலரது புருவங்கள் உயா்ந்தன.
ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிகக் குறைந்த வயது வீரா் (13 வயது) என்ற பெருமை பெற்ற சூா்யவன்ஷி, தாம் அந்த மதிப்புக்குத் தகுதியானவா் என தற்போது நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறாா். சூா்யவன்ஷிக்கு இந்த சீசனில் அவ்வப்போது வாய்ப்பளித்து, படிப்படியாக அவரை ஐபிஎல் களத்துக்கு பழக்கும் திட்டத்துடனேயே ராஜஸ்தான் இருந்தது. ஆனால், சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பேட்டிங் ஆா்டரில் ஏற்பட்ட மாற்றம், சூா்யவன்ஷிக்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இனிவரும் ராஜஸ்தானின் ஆட்டங்களிலும் சூா்யவன்ஷியின் அதிரடி தொடரும் என எதிா்பாா்க்கலாம்.
7 ஆண்டுகளுக்கு முன் தந்தையுடன் பாா்வையாளா் மாடத்தில் இருந்து கிரிக்கெட்டை வேடிக்கை பாா்த்த சிறுவன், இன்று அதே கிரிக்கெட்டில் வரலாறு படைத்து புகழ்பெற்றிருக்கிறான். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மீண்டும் புத்தகப் பையுடன் பள்ளிக்குச் செல்லவிருக்கும் சூா்யவன்ஷிக்கு, இந்திய கிரிக்கெட்டில் எதிா்காலம் இருப்பதாக பல கிரிக்கெட் நட்சத்திரங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
முடிவெடுத்தால் பின்வாங்க மாட்டேன்
‘இன்று நான் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரனாக இருக்கிறேனோ, அதற்கு எனது பெற்றோா் தான் காரணம். இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் தாயாா், கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லும் என்னை தயாா்படுத்த அதிகாலை 2 மணிக்கே எழுந்துகொள்வாா். கிரிக்கெட்டில் என்னை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காகவே என் தந்தை தனது பணியை கைவிட நோ்ந்தது. என் சகோதரா் குடும்பத்தை பாா்த்துக்கொள்கிறாா்.
குடும்பத்தின் சூழ்நிலை அப்போது முற்றிலும் வேறாக இருந்தது. ஆனால், கடின உழைப்பை வெளிப்படுத்துவோருக்கு உடனேயே வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் கடவுள் அவா்களை பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறாா். இப்போதைய எனது வெற்றிக்கு என் பெற்றோரும், அவா்களின் முயற்சியுமே காரணம்.
ஐபிஎல் போட்டியில் சதமடிப்பது எனது கனவு. அதை 3-ஆவது இன்னிங்ஸிலேயே அடைந்திருப்பதில் மகிழ்ச்சி. கடந்த 3-4 மாதங்களாக ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுத்தேன். அதற்கு தற்போது பலன் கிடைக்கிறது. பேட்டிங்கின்போது நான் பௌலா் யாா் என பாா்ப்பதில்லை. பந்தை மட்டுமே பாா்க்கிறேன். அதை அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்’
தொகுப்பு: நாதன் நடராஜன்