படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ்: மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சண்டீகரில் இன்று (மே 29) நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

நாளை (மே 30) நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தொடக்கப் போட்டிகளில் தோல்வியை சந்தித்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக மீண்டு வந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

நன்றாக செயல்பட்டு இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளபோதிலும், இரண்டு அணிகளும் அவர்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதேபோல, மும்பை அணி அதன் கடைசி லீக் போட்டியில் தோல்வியைத் தழுவியது. தோல்விக்குப் பிறகு, இரண்டு அணிகளும் எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ளன.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், அறிமுகமான நான்கு சீசன்களில் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணியும் (கடந்த 2022 அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதையும் சேர்த்து) எலிமினேட்டரில் மோதவுள்ளதால், ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், அண்மையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுப்பது அவரது நம்பிக்கையை அதிகரிக்கும். மறுமுனையில், கடந்த சீசனில் ரசிகர்களின் கிண்டல், கேலிகளுக்கு ஆளான மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, மீண்டும் ரசிகர்களின் நாயகனாக மாறியுள்ளார். ஐபிஎல் கோப்பையை வெல்வது அவருக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது மட்டுமின்றி, எதிரணிக்கு 465 ரன்களை விட்டுக்கொடுத்தது. எதிரணியின் ரன் குவிப்பை குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தத் தவறினர். பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய பொறுப்பு முகமது சிராஜுக்கு இருக்கிறது. புதிய பந்தில் அர்ஷத் கான் சிறப்பாக பந்துவீசத் தவறுவது, நன்றாக பந்துவீசும் பிரசித் கிருஷ்ணாவை பாதிக்கிறது. இந்த சீசனில் பெரிதாக சோபிக்காத ரஷித் கான், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்றால் மிகையாகாது. சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் மூவரும் அணிக்காக ரன்கள் குவித்தனர். ஆனால், இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்காக ஜோஸ் பட்லர் சென்றுவிட்டார். அது குஜராத் அணிக்கு பின்னடைவாக உள்ளது.

ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் குஷல் மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷாருக்கான் மற்றும் ரூதர்ஃபோர்டு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறுகிறார்கள்.

குஜராத் டைட்டன்ஸைப் போலவே, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன. அந்த அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களும் தங்களது நாட்டுக்காக விளையாடுவதற்காக தாயகம் திரும்பிவிட்டனர். சிறப்பாக விளையாடி வந்த ரியான் ரிக்கல்டான் தற்போது அணியில் இல்லை. இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸும் தாயகம் திரும்பிவிட்டார்.

மும்பை அணியில் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் கிளீசன் மற்றும் சரித் அசலங்கா மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மாவுடன் பேர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறுவது மும்பை அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் மும்பை அணியின் மிகப் பெரிய பலமாக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 640 ரன்கள் குவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சொதப்பும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அது ஆபத்தாக அமையலாம்.

முதலில் பேட்டிங் செய்வதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தடுமாற்றத்தைக் காண முடிகிறது. அதனை கேப்டன் ஹார்திக் பாண்டியா சரிசெய்ய வேண்டும். மும்பை அணியில் பந்துவீச்சு வலுவாக இருப்பது, அந்த அணிக்கு மிகப் பெரிய சாதகமான விஷயமாக உள்ளது.

எலிமினேட்டரில் மோதவுள்ள இந்த இரண்டு அணிகளிடமும் நிறை, குறைகள் இருக்கின்றன. எலிமினேட்டரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-க்கு எந்த அணி தகுதிப் பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்

அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT