ராகுல் அரைசதம்: சென்னைக்கு 179 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்ராகுல் அரைசதம்: சென்னைக்கு 179 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 18-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
வழக்கம்போல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பஞ்சாப்புக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ராகுல் நிதானம் காட்ட அகர்வால் துரிதமாக ரன் சேர்த்தார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 8-வது ஓவரில் பியூஷ் சாவ்லா அறிமுகப்படுத்தப்பட்டார். வீசிய முதல் பந்திலேயே அகர்வால் (26 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார் சாவ்லா.
ஆனால், அடுத்து களமிறங்கிய மந்தீப் சிங் சாவ்லாவின் அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்ட ரன் ரேட் உயரத் தொடங்கியது. ஆனால், ஜடேஜாவின் அடுத்த ஓவரில் மந்தீப் சிங் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ராகுல் மற்றும் புதிதாகக் களமிறங்கிய நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினர். ஷர்துல் தாக்குர் பந்தில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்த ராகுல் அரைசதத்தைக் கடந்தார். இதையடுத்து, பூரன் சிக்ஸர்களாக அடிக்க பெரிய ஸ்கோரை நோக்கி நகரத் தொடங்கியது பஞ்சாப்.
திருப்புமுனை ஏற்படுத்திய தாக்குர்:
ஆனால், தாக்குர் வீசிய 18-வது ஓவரில் ஜடேஜாவின் சிறப்பான கேட்ச்சால் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்திலேயே ராகுலும் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதனால், அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
பிராவோ வீசிய 19-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தது பஞ்சாப். 20-வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். முதல் 2 பந்துகளில் சர்பிராஸ் கான் 2 பவுண்டரிகள் அடிக்க ஓவர் அதிரடியுடன் தொடங்கியது. ஆனால், அடுத்த 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
மேக்ஸ்வெல் 11 ரன்களுடனும், சர்பிராஸ் கான் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை அணித் தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் பிராவோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.