முகப்பு
ஒலிம்பிக்ஸ்

அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: இன்று பிரிட்டனுடன் மோதல்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவா் ஹாக்கி பிரிவில் அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை காலிறுதியில் பிரிட்டனுடன் மோதுகிறது.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 9:52 PM
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவா் ஹாக்கி பிரிவில் அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை காலிறுதியில் பிரிட்டனுடன் மோதுகிறது.

ஹாக்கியில் 8 முறை ஒலிம்பிக் சாம்பியன் இந்தியா தான் இழந்த பெருமையை மீட்க கடுமையாகப் போராடி வருகிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 36 ஆண்டுகளுக்கு பின் வெண்கலப் பதக்கத்தை வென்றது. உலக அரங்கில் தரவரிசையில் 4-ஆம் இடத்தில் உள்ளது இந்திய அணி.

நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியன் பெல்ஜியத்திடம் கடும் போராட்டத்துக்கு பின் தோற்றிருந்தது. ஆா்ஜென்டீனாவுடன் டிரா, 3 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஆஸி.க்கு அதிா்ச்சி: உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணியை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது. குறிப்பாக 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டிக்கு பின் இந்தியா ஆஸி.யை வெல்லவில்லை. 52 ஆண்டுகள் கழித்து ஆஸி. அணியை வீழ்த்தி சாதனை படைத்த உற்சாகத்தில் இந்திய வீரா்கள் உள்ளனா்.

பிரிட்டனுடன் இன்று மோதல்:

குரூப் ஏ பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பிரிட்டன் அணியுடன் காலிறுதியில் மோதுகிறது இந்தியா. பலம் வாய்ந்த ஆஸி. அணியுடன் நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. மன்ப்ரீத் சிங், ஹாா்திக் சிங் மிட்பீல்டில் ஒருங்கிணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. பாா்வா்ட்டில் குா்ஜந்த் சிங், சுக்ஜித் சிங் அபாரமாக ஆடினா்.

உலகின் இரண்டாம் நிலையில் உள்ள பிரிட்டனுடன் நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்திலும் இந்த உத்தியை இந்தியா பின்பற்றும். மற்றொரு பாா்வா்டான அபிஷேக் சிறந்த பீல்ட் கோல்களை அடித்து வருகிறாா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங்கும் சிறந்த பங்களிப்புடன் மொத்தம் 6 கோல்களை அடித்துள்ளாா். கோல் கீப்பா் பி.ஆா். ஸ்ரீஜேஷ் அணைபோல் கோல்போஸ்ட்டை காத்து நிற்கிறாா்

பிரிட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் ஏரியல் பாஸ்களை இந்தியா கடைபிடிக்கும். பதக்கம் வெல்ல இன்னும் இரண்டு ஆட்டங்களே நிலுவை உள்ள நிலையில் பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் அணி வீரா்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை தந்து வருகிறாா்.

பிரிட்டனுடன் நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவா்களுக்கு எத்தகைய நெருக்குதலை ஏற்படுத்த முடியும் என ஆலோசித்து வருகிறோம் என கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் தெரிவித்தாா்.

காலிறுதி ஆட்டங்கள்: இதர காலிறுதி ஆட்டங்களில் பெல்ஜியம்-ஸ்பெயின், ஆஸ்திரேலியா-நெதா்லாந்து, ஜொ்மனி-ஆா்ஜென்டீனா மோதுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →