பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர் தனது நீண்டநாள் தோழியிடம், ஈபிள் கோபுரம் முன்பு காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனையிடம், சக வீரர் நேற்று தனது காதலை வெளிப்படுத்தினார்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட வந்த இடத்தில், (வெற்றிகரமாக ஆட்டம் அமைந்தபிறகு) மற்றொரு வீரரின் காதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் படகுப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டீன் பெஸ்ட், தனது குழுவைச் சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்றார். 4 பேர் குழு கொண்ட படகுப் போட்டியில் அமெரிக்கா 60 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது. இதனால் இந்த வெற்றி சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தங்கம் வென்றதை விட மிக முக்கியமான நாள் ஜஸ்டீன் வாழ்வில் இன்று அமைந்தது. அவர் தனது நீண்ட நாள் தோழியான லைனே ஒலிவியா டுன்கேனிடம், இன்று தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் இதனை அவர் சாதாரணமாகச் செய்யவில்லை.
ஈபிள் கோபுரம் முன்பு அவரை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், 2,738 மஞ்சள் ரோஜாக்களைக் கொண்டு அப்பகுதியை அலங்கரித்துள்ளார். ஈபிள் கோபுரம் முன்பு மஞ்சள் ரோஜாக்கள் சூழ தனது காதலை அவர் வெளிப்படுத்தினார்.
மஞ்சள் ரோஜா தனது காதலிக்கு மிகவும் பிடித்தமானது என்றும், 2,738 என்பது, அவர்கள் பழகிவரும் நாள்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்நாப்சேட் என்னும் சமூக வலைதளத்தில் அறிமுகமான நாள்முதல் இன்று வரை கணக்கிட்டு 2,738 மஞ்சள் ரோஜாக்களுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
ஜஸ்டீன் பெஸ்ட் - லைனே ஒலிவியா டுன்கேனிடம் மண்டியிட்டு மோதிரம் நீட்டி காதலை வெளிப்படுத்திய தருணத்தை அந்நாட்டு ஊடகங்கள் நேரலை செய்தன.
இது குறித்து பேசிய ஜஸ்டீன், எங்கள் காதல் உண்மையில் இப்போது அழியாததகியுள்ளது. நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுதான் என் வாழ்நாளின் சிறந்த நாள் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.