முகப்பு
ஸ்பெஷல்

பயமறியா இளங்கன்று களம்கண்ட தினம் இன்று!

கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேசப் பயணத்தை இன்று துவங்கினார்.

Updated On : 15 நவம்பர், 2017 at 6:50 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:37 PM

லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றெல்லாம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அறியப்பட்ட சச்சின் டெண்டுல்கர், தனது முதல் சர்வதேசப் போட்டியில் இன்றைய தினத்தில் களம்கண்டார்.

1989-ம் வருடம் நவம்பர் மாதம் 15-ந் தேதி கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் சர்வதேச அளவிலான தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார். அன்றைய தினத்தில் 16 வயது பயமறியா இளங்கன்றாய் களம்புகுந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ஒருவித பரபரப்பு ஏற்படும். அந்தப் பரபரப்பிலும் இந்தச் சூறாவளி தென்றலாய் களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக 6-வது வரிசை வீரராக பேட்டிங் செய்தார்.

Advertisement

அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்திருந்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த கடிமான சூழ்நிலையில் விளையாடிய அந்தச் சிறுவன் 24 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரிகளை விரட்டி 15 ரன்களில் ஆட்டமிழந்தான். 

அந்தப் போட்டி பாகிஸ்தான் ஜாம்பவான் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸுக்கும் முதல் ஆட்டமாக அமைந்தது. அவரே சச்சினை இப்போட்டியில் வீழ்த்திய சொந்தக்காரர். இருப்பினும் இந்திய அணி இப்போட்டியில் போராடி டிரா செய்தது. 

அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டி இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கபில் தேவுக்கு 100-ஆவது ஆட்டமாக அமைந்தது. இதில், 350 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையைச் செய்தார்.

இப்போட்டியில் ரன் குவிக்காவிட்டாலும் இதற்கு அடுத்த காலகட்டத்தில் தான் அந்த வரலாறு உருவானது. உலகின் முன்னணி வீரர்களில் முக்கிய இடம்பிடித்தார் சச்சின். சர் டான் பிராட்மேனுக்கு நிகராகப் புகழப்பட்டார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுத்த முதல் வீரர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர், 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரர் போன்ற பலதரப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ளார்.

சுமார் 24 வருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் ஆவார். கடைசியாக டிசம்பர் 14, 2013 அன்று மே.இ.தீவுகளுடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெறுமையைப் பெற்றார். மேலும் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார்.

இதுவரையில், மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் (ஒரு இன்னிங்ஸில்) எடுத்துள்ளார். சராசரி 53.78 ஆகும்.

463 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 49 சதங்களை விளாசி 18,426 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசினார். சராசரி 44.83 ஆகும்.

மொத்தம் 664 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை விளாசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.