முகப்பு
ஸ்பெஷல்

8 ஐபிஎல் அணிகளுக்கும் வாய்ப்புகள்: பிளேஆஃப் சாத்தியக்கூறுகள் என்னென்ன?

பிளேஆஃப் செல்ல 8 அணிகளுக்கும் வாய்ப்புள்ளது என்பதுதான் ஆச்சர்யத் தகவல்...

ஸ்பெஷல்

8 ஐபிஎல் அணிகளுக்கும் வாய்ப்புகள்: பிளேஆஃப் சாத்தியக்கூறுகள் என்னென்ன?

பிளேஆஃப் செல்ல 8 அணிகளுக்கும் வாய்ப்புள்ளது என்பதுதான் ஆச்சர்யத் தகவல்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:55 PM
பகிர்:

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தானை தில்லி தோற்கடித்ததால் சுவாரசியமான நிலைக்குச் சென்றுள்ளன பிளேஆஃப் வாய்ப்புகள்.

தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் மெல்ல மெல்ல மேலேறி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது இடத்துக்கும், மும்பை அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

பஞ்சாப் தவிர அனைத்து அணிகளும் குறைந்தது 8 ஆட்டங்கள் விளையாடியுள்ளன. பஞ்சாப் 7 ஆட்டங்களிலும் தில்லி அதிகபட்சமாக 9 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இதர அணிகள் தலா 8 ஆட்டங்கள் விளையாடியுள்ளன. 

இதுவரை பிளேஆஃப் செல்ல 8 அணிகளுக்கும் வாய்ப்புள்ளது என்பதுதான் ஆச்சர்யத் தகவல். இதனால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற எட்டு அணிகளுடம் முனைப்புடன் உள்ளன. தில்லி அணியின் நேற்றைய ஆட்டம் ஓர் உதாரணம்.

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

வரிசை எண் அணிகள்ஆட்டங்கள்வெற்றிகள்தோல்விகள்புள்ளிகள்நெட் ரன்ரேட்
 1.  சென்னை  8 6 2 12 0.553
 2 ஹைதரபாத்  8 6 2 12 0.514
 3. பஞ்சாப் 7 5 2 10 0.228
 4. கொல்கத்தா 8 4 4 8 0.110
 5. பெங்களூர் 8 3 5 6 -0.301
 6. தில்லி 9 3 6 6 -0.450
 7. ராஜஸ்தான் 8 3 5 6 -0.726
 8. மும்பை 8 2 6 4 -0.059

* சென்னையும் ஹைதராபாத்தும் 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. இந்த இரு அணிகளும் மீதமுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் வென்றால் போதும். 16 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறமுடியும். 

* பஞ்சாப் அணி 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் ஜம் என்று 3-ம் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு மீதமுள்ள 7 ஆட்டங்களில் 3 வெற்றி கிடைத்தால் போதும். பிளேஆஃப் சென்றுவிடலாம்.

* 8 ஆட்டங்களில் நான்கு வெற்றி பெற்று பாதுகாப்பான நிலையில் உள்ளது கொல்கத்தா. ஆனால் அந்த அணி மீதமுள்ள 6 ஆட்டங்களில் 4-ல் வென்றாக வேண்டும். மிகமோசமாக விளையாடினால் மட்டுமே அந்த அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாமல் போகும். 

* பெங்களூரும் ராஜஸ்தானும் 8 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் பிளேஆஃப் செல்ல வாய்ப்புண்டா? மீதமுள்ள 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெறவேண்டும். அப்படி நடந்தால் பிளேஆஃப் உறுதியாகிவிடும். அதற்குப் பதிலாக 4-ல் மட்டும் வெற்றி பெற்றால் பிறகு நெட் ரன்ரேட்டின் அடிப்படையிலேயே செல்ல நேரிடும்.

* தில்லி அணி 9 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள 5 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்-புக்குச் செல்லமுடியும். 5-ல் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றால் நெட் ரன்ரேட்டை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

* ஐபிஎல்-லில் அதிகதடவையாக மூன்று முறை சாம்பியனாக உள்ள மும்பை அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகள். ஆனால் மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மும்பை அணியால் எந்தச் சிக்கலும் இல்லாமல் பிளேஆஃப்-புக்குச் செல்லமுடியும்? அது சாத்தியமா? 

8 அணிகளுக்கும் பிளேஆஃப் வாய்ப்புகள் இருந்தாலும் தில்லி, மும்பை ஆகிய இரு அணிகள் மட்டுமே மீதமுள்ள எல்லா ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அப்போதுதான் 8 வெற்றிகளுடன் பிளேஆஃப்-புக்குச் செல்லமுடியும். ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் மே 20 அன்று தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன. எனவே இவ்விரு அணிகளில் 8 வெற்றிகளுடன் பிளேஆஃப் செல்ல ஓர் அணிக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். 

மேலே சொன்ன அனைத்தும் 8 வெற்றிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை. 7 வெற்றிகளுடனும் பிளேஆஃப் செல்லமுடியும். ஆனால் நெட்ரன்ரேட் என்கிற அதிர்ஷ்டம் ஒத்துழைக்க வேண்டும். 

 7 வெற்றிகளுடன் பல அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் இருந்துள்ளன. ஆனால், ஐபிஎல்-லில் 8 வெற்றிகள் பெற்ற அனைத்து அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. எனவே 8 புள்ளிகளை அடையவே அனைத்து அணிகளும் முயற்சி செய்கின்றன.

ஏழு வெற்றிகள், 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற அணிகள்: 

2008 - தில்லி

2009 - தில்லி

2010 - சென்னை, பெங்களூர்

2014 மும்பை

ஆனால், ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகள் ஏன் 15 புள்ளிகள் எடுத்தும்கூட நெட் ரன்ரேட் அல்லது குறைந்த புள்ளிகள் ஆகிய காரணங்களால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போன அணிகளும் உண்டு. 

ஏழு வெற்றிகளுடன் 14 புள்ளிகள் எடுத்தும் (2015-ல் கொல்கத்தா 15 புள்ளிகள் எடுத்தும்) பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாத அணிகள்:

2008 - மும்பை

2009 - பஞ்சாப்  

2010 - தில்லி, கொல்கத்தா

2011 - பஞ்சாப்

2014 - ராஜஸ்தான்

2015 - கொல்கத்தா, ஹைதராபாத்

2016 - மும்பை, தில்லி

2017 - பஞ்சாப். 

கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் அணிகள் எட்டு வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெறவே மெனக்கெடுகின்றன. இந்த மூன்று வருடங்களிலும் 16 புள்ளிகள் எடுத்த அணிகள் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. 

இந்த வருடம் என்ன நடக்கப்போகிறது?

இந்த நிமிடம் வரை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற 8 அணிகளும் வாய்ப்புண்டு.  இதை அந்த அணிகள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகின்றன? ஏற்கெனவே ஐபிஎல் வெகுசுவாரசியமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளேஆஃப்-புக்கான போட்டிகள் கூடுதல் பரபரப்பை உண்டுபண்ணும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். 

முழு கட்டுரையைப் படிக்க →