பறக்கும் சிக்ஸர்கள்: தோனிக்குத் தலைவலியாக இருக்கும் 19-வது ஓவர்!
19-வது ஓவர் வந்தாலே சிஎஸ்கே ரசிகர்கள் நடுங்கும் அளவுக்கு ஆகிவிட்டது. சென்னை அணி தொடர்ச்சியாகத் தோல்விகளை அடைய...
ஸ்பெஷல்பறக்கும் சிக்ஸர்கள்: தோனிக்குத் தலைவலியாக இருக்கும் 19-வது ஓவர்!
19-வது ஓவர் வந்தாலே சிஎஸ்கே ரசிகர்கள் நடுங்கும் அளவுக்கு ஆகிவிட்டது. சென்னை அணி தொடர்ச்சியாகத் தோல்விகளை அடைய...
19-வது ஓவர் வந்தாலே சிஎஸ்கே ரசிகர்கள் நடுங்கும் அளவுக்கு ஆகிவிட்டது. சென்னை அணி தொடர்ச்சியாகத் தோல்விகளை அடைய 19-வது ஓவர் மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 43-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 176 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டையும், சோதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வென்றது. சென்னை தரப்பில் வில்லி, ஹர்பஜன், ஜடேஜா, தாகுர், பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ராஜஸ்தான் அணியின் 19-வது ஓவரில் வில்லி 19 ரன்களைக் கொடுத்தது திருப்புமுனையாக அமைந்தது. இதனால் கடைசி ஓவரில் 12 ரன்களை எளிதாக எடுத்து வென்றது ராஜஸ்தான்.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த ஆட்டங்கள் - 6. இதில் 3-ல் தோல்வி கண்டுள்ளது. இதில் 19-வது ஓவரில் ரன்களை வாரி இறைத்ததாலேயே சென்னை அணி இரண்டு ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஏப்ரல் 28 அன்று மும்பைக்கு எதிரான முதலில் விளையாடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய மும்பை அணி இந்த இலக்கை 19.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஷர்துல் தாக்குர் 19 ரன்களை வாரி வழங்கினார். இதனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் போதும் என்கிற எளிதான இலக்கு மும்பைக்கு வாய்த்தது.
மே 3 அன்று கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் விளையாடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி கண்டது கொல்கத்தா. இந்த ஆட்டத்தில் கடைசி 10 பந்துகளில் 25 ரன்களை வாரி வழங்கினார்கள் என்கிடியும் பிராவோவும்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வில்லி 19-வது ஓவரில் 19 ரன்களை வாரிக் கொடுத்ததால் ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதில் பெரிய சிரமம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரண்டாவதாகப் பந்துவீசியபோது 19-வது ஓவரின் ஒவ்வொரு அணிகளின் எகானமி இது:
ஹைதராபாத் - 6.00
பெங்களூர் - 10.17
கொல்கத்தா - 11.50
தில்லி - 11.72
பஞ்சாப் - 11.80
மும்பை - 12.32
ராஜஸ்தான் - 15.42
சென்னை - 16.00
சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு, தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணம், அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் 19-வது ஓவரைத் துல்லியமாக வீசி எதிரணிகளுக்கு நெருக்கடி அளிப்பதால்தான். இரண்டாவதாகப் பந்துவீசி 19-வது ஓவரில் 6 ரன்கள் மட்டும் கொடுப்பதென்பது நம்பமுடியாத சாதனை. இதர அணிகள் அனைத்துமே 10 ரன்களுக்கும் மேல் 19-வது ஓவரில் கொடுத்துள்ளன. சென்னை அணி எல்லா அணிகளிளை விடவும் மிக மோசமாக 16 ரன்களைக் கொடுத்துள்ளது. இதனால்தான் இருமுறை தோல்வியடைய நேர்ந்துள்ளது.
இதற்குத் தீர்வு என்ன?
சிறந்த பந்துவீச்சாளர் 19-வது ஓவரை வீசவேண்டும். இனிவரும் ஆட்டங்களில் பிராவாவையோ அல்லது அந்த நாளில் சிறப்பாகப் பந்துவீசுபவரையோ 19-வது ஓவரை வீசச்சொல்லலாம். உத்திகளில் மாற்றம் கொண்டுவராமல் அதே தவறுகளைச் செய்தால் சென்னை அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாமல் போகக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம். கடைசிக்கட்டங்களில் எவ்வாறு பந்துவீசவேண்டும் என்பதில் பந்துவீச்சுப் பயிற்சியாளர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது. ஏற்கெனவே பந்துவீச்சு சென்னை அணியின் பெரிய பலவீனமாக உள்ளது. இதில் 19-வது ஓவரால் மேலும் தலைவலி ஏற்படக்கூடாது. தோனி உடனடியாகச் சரிசெய்யவேண்டிய குறை இது.