முகப்பு
ஸ்பெஷல்

கடைசி இரு இடங்களுக்குப் போட்டியிடும் 5 அணிகள்: பிளேஆஃப் சாத்தியக்கூறுகள் என்னென்ன?

8 ஆட்டங்களில் சென்னை - தில்லி ஆட்டத்தைத் தவிர மீதமுள்ள 7 ஆட்டங்களும் பிளேஆஃப் வாய்ப்புகளை முடிவு செய்வதாக...

ஸ்பெஷல்

கடைசி இரு இடங்களுக்குப் போட்டியிடும் 5 அணிகள்: பிளேஆஃப் சாத்தியக்கூறுகள் என்னென்ன?

8 ஆட்டங்களில் சென்னை - தில்லி ஆட்டத்தைத் தவிர மீதமுள்ள 7 ஆட்டங்களும் பிளேஆஃப் வாய்ப்புகளை முடிவு செய்வதாக...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

இந்த எட்டு அணிகளில் டெல்லி அணியால் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாது. முதல் இரு இடங்களை ஹைதராபாத்தும் சென்னையும் பிடித்துக்கொண்டுவிட்டன. ஆக பிளேஆஃப்-பில் மீதமுள்ள இரு இடங்களுக்கு 5 அணிகள் போட்டியிடுகின்றன. 

கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, பெங்களூர் ஆகிய 5 அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற வேண்டும் எனக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. எனில், அவர்களுக்கான பிளேஆஃப் சாத்தியக்கூறுகள் என்னென்ன? பார்க்கலாம்.

பஞ்சாப் - பெங்களூர் ஆட்டங்களுக்குப் பிறகு நடக்கவுள்ள 8 ஆட்டங்களில் சென்னை - தில்லி ஆட்டத்தைத் தவிர மீதமுள்ள 7 ஆட்டங்களும் பிளேஆஃப் வாய்ப்புகளை முடிவு செய்வதாக அமைகின்றன. 

ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றிகள் தோல்விகள்  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 ஹைதராபாத்  12 9 3 18 0.400
 சென்னை  12 8 4 16 0.383
 கொல்கத்தா 12 6 6 12 -0.189
 ராஜஸ்தான் 12 6 6 12 -0.347
 பஞ்சாப் 12 6 6 12 -0.518
 மும்பை 12 5 7 10 0.405
 பெங்களூர் 12 5 7 10 0.218
 தில்லி 12 3 9 6 -0.478

கொல்கத்தா அணி (புள்ளிகள் 12; நெட் ரன்ரேட் -0.189)

12 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

ஆனால் இதே 12 புள்ளிகளுடன் மூன்று அணிகள் உள்ளதுதான் (பஞ்சாப் - பெங்களூர் ஆட்டத்தின் முடிவு வரை) அதன் இடத்துக்கு ஆபத்தாக உள்ளது. 

மீதமுள்ள இரு ஆட்டங்களையும் வென்றுவிட்டால் 16 புள்ளிகளுடன் ஜம்மென்று பிளேஆஃப்-புக்குச் சென்றுவிடலாம். 

ஆனால் 2-ல் ஓர் ஆட்டத்தில் மட்டும் வென்றால் என்ன ஆகும்? பிளேஆஃப்-புக்குள் செல்லமுடியுமா?

முடியும். அப்போது பஞ்சாப்பும் ராஜஸ்தானும் மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் தோற்கவேண்டும். 

கொல்கத்தா ஓர் ஆட்டத்தில் மட்டும் வென்றால், பல அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்க வாய்ப்புண்டு. அப்போது நெட்ரன்ரேட் அடிப்படையில் அணிகள் பிளேஆஃப்-புக்குள் செல்லும். கொல்கத்தாவின் நெட் ரன்ரேட் -0.189. இது கடைசிக் கட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மேலும் தோல்விகளைப் பெற்றால் இந்த ரன்ரேட்டும் மோசமாகும். இதனால் 12 புள்ளிகளை வைத்துக்கொண்டு நெட் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவால் பிளேஆஃப்-புக்குள் செல்லமுடியாமல் போகலாம்.  

ராஜஸ்தான் ராயல்ஸ் (புள்ளிகள் 12; நெட் ரன்ரேட் -0.347)

முதல் 9 ஆட்டங்களில் ஆறு புள்ளிகள் மட்டுமே வைத்திருந்த ராஜஸ்தான் தற்போது தன் கையில் 12 புள்ளிகளை வைத்து பிளேஆஃப் கதவைப் பலமாகத் தட்டவுள்ளது.

மீதமுள்ள இரு ஆட்டங்களையும் வென்றால் பிளேஆஃப்-புக்குள் செல்லமுடியும்.

இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்றால் ராஜஸ்தானால் 14 புள்ளிகளுடன் செல்ல வாய்ப்புண்டு. ஏனெனில் இதன்மூலம் கொல்கத்தாவையும் 16 புள்ளிகளுடன் செல்வதைத் தடுக்க முடியும். கொல்கத்தாவால் ராஜஸ்தானைத் தாண்டியும் செல்லமுடியாது. கொல்கத்தா போல ராஜஸ்தானும் மோசமான நெட் ரன்ரேட்டை வைத்துள்ளதால் 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குள் செல்வது கடினம். 

மும்பை இந்தியன்ஸ் (புள்ளிகள் 10; நெட் ரன்ரேட் +0.405)

ஐபிஎல்-லின் ஆரம்பக் கட்டத்தில் கடைசி ஓவர்களில் தோற்ற ஆட்டங்களால் தற்போது பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது மும்பை அணி. 12 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளை வைத்துள்ளது. 

புதன் அன்று பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை தோற்றுப்போனால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். 

மீதமுள்ள இரு ஆட்டங்களையும் வென்றால் 14 புள்ளிகள் வைத்துள்ள அணிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிட்டு முன்னேற வாய்ப்புண்டு. ஏனெனில் மும்பை அணிக்கு +0.405 என்கிற வலுவான ரன்ரேட் உள்ளதால் அது கடைசிக்கட்டத்தில் பலனளிக்கும். 12 புள்ளிகளுடன் தகுதி பெற குறைவான வாய்ப்புகளே உள்ளன.  

பஞ்சாப் (புள்ளிகள் 12; நெட் ரன்ரேட் -0.518)

முதல் ஆறு ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. ஆனால் அடுத்த ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே பஞ்சாப் அணியால் வெல்ல முடிந்துள்ளது. இதனால் 12 ஆட்டங்களில் 6-ல் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகள் வைத்துள்ளது. 

மீதமுள்ள இரு ஆட்டங்களையும் வென்றால் பிளேஆஃப்-புக்குள் செல்லமுடியும். 

ஓர் ஆட்டத்தில் மட்டும் வென்றால் 14 புள்ளிகளுடன் இதர அணிகளோடு நெட் ரன்ரேட் அடிப்படையில் போராடவேண்டும். பெங்களூருக்கு எதிராக மிக மோசமாகத் தோற்றதால் அதன் நெட் ரன் ரேட்   -0.056-லிருந்து -0.518 என மோசமான நிலையை அடைந்துள்ளது. எனவே இதர அணிகளுடன் சேர்ந்து 14/12 புள்ளிகள் வைத்திருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் வெளியேறவே அதிக வாய்ப்புண்டு. எனவே மீதமுள்ள இரு ஆட்டங்களையும் வெல்வதே நல்லது.

பெங்களூர் (புள்ளிகள் 10; நெட் ரன்ரேட் -0.218)  

12 ஆட்டங்களில் 5 வெற்றிகளை அடைந்துள்ள பெங்களூர் அணி, 10 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஆட்டங்களையும் வென்றாலும் கூட பெங்களூர் அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முடியும். ஆனால் அதற்குச் சாதகமாக சில முடிவுகள் அமையவேண்டும். 

தற்போது பெங்களூர் அணியின் நெட்ரன்ரேட் +0.218. அதாவது -0.261 என இருந்ததை ஒரே ஆட்டத்தில் மாற்றிவிட்டது. இதை அப்படியே வைத்துக்கொண்டு 14 புள்ளிகளை அடைந்தால் பிளேஆஃப்-புக்குள் செல்ல நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

ஆனால், பஞ்சாப்பும் கொல்கத்தா அல்லது ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றும் மீதமுள்ள எல்லா ஆட்டங்களையும் வென்றால் பெங்களூர் அணியால் பிளேஆஃப்-புக்குள் செல்லமுடியாது. ஏனெனில் மீதமுள்ள ஆட்டங்களை வென்றுவிட்டால் பஞ்சாப்பும் கொல்கத்தா அல்லது ராஜஸ்தானும் தங்கள் கையில் 16 புள்ளிகளை வைத்திருப்பார்கள். கடைசி இரு இடங்களையும் இந்த அணிகள் எடுத்துக்கொள்ளும். பெங்களூர் வெளியேற வேண்டியதுதான்.

எனினும் பெங்களூர் உள்ளிட்ட நான்கு அணிகள் 12 புள்ளிகள் வைத்திருந்தாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் கோலி அணியால் பிளேஆஃப்-புக்குள் நுழைய முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →