சிஎஸ்கேவின் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரசிகர்களால் தளபதி என்றழைக்கப்படும் ஜடேஜா (37 வயது) தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் செல்ல, அங்கு கேப்டனாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் (31 வயது) சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கிறார்.
நிரந்தரமே இல்லாத இவ்வுலகில் மாற்றங்களை விரும்பாத சில சிஸ்கே ரசிகர்களுக்கு இந்த முடிவுகள் கசப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
ரூ.14 கோடிக்கு ஜடேஜாவே ஒப்புதல் வாங்கிக்கொண்டு, இதற்காக ஏற்கெனவே ரீல்ஸ் எல்லாம் எடுத்துவிட்டுதான் கொல்கத்தாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப் போயிருக்கிறார்.
இது புரியாமல் கண்ணீர் வடிக்கும் ரசிகர்களை என்னவென்று சொல்வது? மாற்றம் ஒன்றே... பழைய வசனமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!
சரி, சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் சரியான தேர்வா? கீப்பர் பேட்டர் என்பதால் தோனி ஓய்வுக்குப் பிறகு இன்னொரு கீப்பரைத் தேடி அலைய வேண்டியதில்லை. தேவைப்பட்டால் கேப்டனாகவும் இருப்பார்.
இதுவரை சாம்சன் தலைமையில் கோப்பை வெல்லவில்லை; இருப்பினும் அனுபவம் அதிகமாக இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.
சாம்சன் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டுகளில் இரண்டாம் இடம் வகிப்பது - தொடரின் தொடக்கத்தில் மட்டுமே நன்றாக ஆடுவார்; பின்னர் சொதப்புவார் என்பதே.
கடைசி ஐந்து ஆண்டுகளாக அவரது பேட்டிங்...
2020 - 375 ரன்கள் - 158.90 ஸ்டிரைக் ரேட்
2021 - 484 ரன்கள் - 136.71 ஸ்டிரைக் ரேட்
2022 - 458 ரன்கள் - 146.79 ஸ்டிரைக் ரேட்
2023 - 362 ரன்கள் - 153.39 ஸ்டிரைக் ரேட்
2024 - 531 ரன்கள் - 153.47 ஸ்டிரைக் ரேட்
2025 - 285 ரன்கள் - 140.39 ஸ்டிரைக் ரேட்
கடைசி சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடவில்லை. இந்தப் புள்ளி விவரங்களில் இருந்து தெரிய வருவது என்னவென்றால், அந்தக் குற்றச்சாட்டு பொய் என்பதே.
சராசரியாக 400-450 ரன்களை 140-150 ஸ்டிரைக் ரேட்டில் அடிக்கிறார். சிஎஸ்கே போன்ற அணிக்கு இந்தத் தொடக்கம் மிகவும் சிறப்பானது.
பொதுவாகவே நல்ல திறமைசாலிகள் ஃபார்மில் இல்லாவிட்டாலும் இதுவரை தங்கள் உச்சத்தைத் தொடாதவராக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு வந்தால் ராசியின் கட்டம் குருவுக்கே இடம்பெயருவதுபோல சாதகமாக மாறும் என்பதுதான் வரலாறு.
ஆல்பி மார்கல், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ரஹானே என இந்தப் பட்டியல் அதிகம். இதேபோல் சஞ்சு சாம்சனும் தனது உச்சத்தை சிஎஸ்கேவில் தொடவும் வாய்ப்பு இருக்கிறது.
சரி, சாம்சன் மீதான முதலாவது குற்றச்சாட்டு என்ன?
தொடக்க வீரராக மட்டுமே நொட்டுவார், வேறு இடங்களில் களமிறங்கினால் சொதப்புவார் என்றும் கூறப்படுகிறது. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய்?
மீண்டும் புள்ளி விவரங்களைப் பார்ப்பதற்கு முன்பாக...
ஆசிய கோப்பையின்போது சஞ்சு சாம்சனிடம் இந்த பேட்டிங் வரிசைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சாம்சன், " மோகன்லாலுக்கு இந்தியாவின் உயரிய விருது சமீபத்தில் கிடைத்தது. அது அவர் ஹீரோவாக நடித்ததுக்கு மட்டுமே அல்ல. அவர் வில்லனாக, நகைச்சுவையாளராக பல பரிணாமங்களில் நடித்துள்ளார். அதேபோல் நானும் எந்த வரிசையில் இறங்கினாலும் விளையாடுவேன். ஹீரோவாக மட்டுமே நடிக்க மாட்டேன். ஜோக்கராகவும் நடிப்பேன்" என்றார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த நேர்காணலர், "ஓ. சூப்பர் மோகன்லால்" எனத் தவறுதலாகக் கூறி, பின்னர் சுதாரித்து, "சூப்பர் சஞ்சு " என்பார்.
இதற்கு சாம்சன் சிரித்துக் கொண்டே பெருமையுடன், "சஞ்சு மோகன்லால் சாம்சன் " என்பார்.
இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் சாம்சன் அடித்த மூன்று சதமும் தொடக்க வீரராக மட்டுமே. சமீபத்தில் அவரை வேறு இடங்களில் களமிறக்கிய போது அந்த அளவுக்கு விளையாடவில்லை.
ஐபிஎல் தொடரில் பேட்டிங் வரிசையின்படி சாம்சனின் ரன்கள்...
நம்.1 இடத்தில் - 30 போட்டிகளில் 794 ரன்கள்
நம்.2 இடத்தில் - 16 போட்டிகளில் 480 ரன்கள்
நம்.3 இடத்தில் - 102 போட்டிகளில் 3,395 ரன்கள்
நம்.4 இடத்தில் - 19 போட்டிகளில் 437 ரன்கள்
இந்தப் புள்ளி விவரங்கள் வைத்து பார்த்ததில் முதல் குற்றச்சாட்டும் பொய் என்றே நிரூபணமாகிறது.
தொடக்க வீரரை விட மூன்றாவது இடத்தில் களமிறங்கிதான் சாம்சன் அதிக ரன்களைக் குவித்துள்ளார்.
டாப் ஆர்டரில் இந்திய பேட்டர் ஒருவர் வேண்டும் என்றுதான் சாம்சனை எடுத்தோம் என சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் நேற்று (நவ.15) காலையில் விடியோவில் பேட்டி அளித்திருந்தார்.
இதனால், சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசையை நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் கவலை அடைய வேண்டியதில்லை!
சாம்சன் சரிசெய்ய வேண்டியது என்ன?
ரோஹித் சர்மா மாதிரி கஷ்டப்படாமலே சிக்ஸர் அடிக்கும் திறமையைப் பெற்றவர் சஞ்சு சாம்சன்.
தொழில்நுட்ப ரீதியாகச் சொல்ல வேண்டுமானால், சஞ்சு சாம்சனின் பலமும் பலவீனமும் ஆக அவரது பேட் ஸ்விங் இருப்பதை நினைத்து ரசிகர்கள் சிறிது கவலைப்படலாம்.
சுழல் பந்து வீசினாலும் சரி, வேகப் பந்து வீசினாலும் சரி அவைகளை எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறமைசாலி சாம்சன். இப்படி இருக்க, வேகப் பந்துவீச்சாளர்கள் திடீரென மெதுவாக வீசும்போது (Slower balls), அதற்காக தொடர்ச்சியாக சாம்சன் ஆட்டமிழந்துள்ளார்.
இந்தச் சிறிய மாறுதலை மட்டும் சஞ்சு சாம்சன் கவனித்து ஆடினால் போதும். அவர் எந்த வரிசையில் களமிறங்கினாலும் சரவெடி உறுதி! அவர் தன் விருப்பப்படி மோகன்லாலாகவும் மாறலாம்.! தாதா சாகேப் பால்கே போல பல விருதுகளும் (ஆட்ட நாயகன், ஆட்டத்தை மாற்றுபவர் - Game changer போன்ற ஐபிஎல் விருதுகளும்) கிடைக்கும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.