இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 2012-ல் இங்கிலாந்திடம் கண்ட படுதோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.
சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 66, ஆதில் ரஷித் 60 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது இந்தியா. சென்னை மைதானத்தில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்ஸர், 32 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த 2-ஆவது இந்தியர் என்ற வரலாற்று சிறப்பைப் படைத்தார். கருண் நாயர் தனது 3-ஆவது போட்டியிலேயே முச்சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது. அலாஸ்டர் குக் 3, கேதன் ஜென்னிங்ஸ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
ஆடுகளம் ஓரளவுக்கு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாற ஆரம்பித்துள்ளது. எனவே கடைசி நாளான இன்று இங்கிலாந்து வீரர்களை விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் இந்திய அணி இன்னொரு இன்னிங்ஸ் வெற்றியை ருசிப்பதற்கு வாய்ப்புள்ள நிலையில் தொடக்க வீரர்களான குக்கும் ஜென்னிங்ஸும் சிறப்பாக விளையாடி தங்களை விக்கெட்டுகளைக் காத்துக்கொண்டார்கள்.
உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில், விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்தது. குக் 47, ஜென்னிங்ஸ் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பிறகு ஜடேஜாவின் பந்துவீச்சு இங்கிலாந்துக்குக் கடும் நெருக்கடியை அளித்தது. இந்தத் தொடரில் 6-வது முறையாக ஜடேஜாவின் பந்துவீச்சில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார் குக். அடுத்தச் சில ஓவர்களில் ஜடேஜா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஜென்னிங்ஸ். அவர் 54 ரன்கள் எடுத்தார். பிறகு டிஆர்எஸ் உதவியுடன் ரூட்டை 6 ரன்களில் வீழ்த்தினார் ஜடேஜா. பேர்ஸ்டோவ், இஷாந்த் பந்துவீச்சில் ஜடேஜாவின் அட்டகாசமான கேட்சில் 1 ரன்னுடன் வெளியேறினார்.
இதனால் தேநீர் இடைவேளையின்போது 64 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்கப் போராடியது இங்கிலாந்து அணி. மொயீன் அலி 32, ஸ்டோக்ஸ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பிறகு இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் கடகடவென விழத் தொடங்கின. நன்றாக ஆடிக்கொண்டிருந்த மொயீன் அலி 44 ரன்களில், ஜடேஜா பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜடேஜாவின் அடுத்த ஓவரில் 23 ரன்களில் வீழ்ந்தார் ஸ்டோக்ஸ். உடனே மிஸ்ரா டெளசனை க்ளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். இன்றைய தினம் கோலியின் பல திட்டங்கள் அபாரமாக நிறைவேறின. உமேஷ் யாதவைப் பந்துவீச அழைத்தார். அவர் உடனே ரஷித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு மிக அருகில் நெருங்கும் சூழல் உருவானது. மைதானத்தில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி இந்திய அணியினரை உற்சாகப்படுத்தினார்கள்.
ஜடேஜா, தன்னுடைய 25-வது ஓவரில் பிராட், பால் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 207 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை டெஸ்டை வென்று, 4-0 என்கிற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.