இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது.
4-ஆவது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா அணி 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் 7-ஆவது தோல்வியை சந்தித்துள்ள கோவா அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
ஃபட்ரோடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது கோவா அணி. அதேநேரத்தில் கொல்கத்தா அணியும் அபாரமாக ஆடியது. 21-ஆவது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை நெருங்கியது கொல்கத்தா. ஆனால் லாரா அடித்த ஷாட்டை கோவா கோல் கீப்பர் கட்டிமானி முறியடித்தார்.
28-ஆவது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து ரூய்டாஸ் கொடுத்த கிராஸில் ஜுவான் பெலன்காúஸா தலையால் முட்டி கோலடிக்க, கொல்கத்தா 1-0 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில் 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோலடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது கோவா. 66 மற்றும் 70-ஆவது நிமிடங்களில் கோவா வீரர்கள் பெர்னாண்டஸ், ராபின் சிங் ஆகியோரின் கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
தொடர்ந்து போராடிய கோவா அணி 80-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. லூயிஸ் கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மந்தர் தேசாய் மிக அற்புதமாக கொல்கத்தாவின் பின்கள வீரர்களை வீழ்த்தி இந்த கோலை அடித்தார்.
இதனால் கடைசி 10 நிமிடங்கள் பரபரப்பானது. இரு அணிகளும் போராட, "இஞ்சுரி' நேரத்தில் டூட்டி சமிக் தனியாளாக பந்தை கடத்தி வந்து கோலடிக்க முயற்சித்தார். ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. எனினும் மனம் தளராமல் ஆடிய சமிக், மற்றொரு வாய்ப்பில் பியர்சனுக்கு பந்தைக் கடத்த, அவர் கோலடித்தார். இதனால் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இன்றைய ஆட்டம்
கேரளம்-புணே
இடம்: கொச்சி, நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.