முகப்பு
செய்திகள்

ஒருநாள் போட்டி: இந்தியாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துமா நியூஸிலாந்து?

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் தில்லியில் நாளை நடைபெறுகிறது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் தில்லியில் நாளை நடைபெறுகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்தில் ஒரு நாள் தொடரில் விளையாடிவருகிறது இந்திய அணி. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 7 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்தார். ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம்  நாளை (20-ஆம் தேதி) தில்லியில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் வென்றதன் மூலம், தோனி தலைமையில் இந்திய அணி 108-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன்களின் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் தோனி. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கும் (165), 3-ஆவது இடத்தில் ஆலன் பார்டரும் (107) உள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்களான ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகிவிட்டதால், ரோஹித் சர்மாவுடன் அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்குகிறார். இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை இருவரும் தொடர்ந்து ஏற்படுத்தித் தருவார்கள் என்று எண்ண வைத்துள்ளார்கள்.

மிடில் ஆர்டரில் விராட் கோலி, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்து ஃபார்முக்கு திரும்பியிருக்கும் கோலி, ஒரு நாள் ஆட்டத்திலும் நியூஸிலாந்து பெளலர்களை பதம்பார்க்கிறார். சுரேஷ் ரெய்னா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டாவது போட்டியிலும் விளையாடவில்லை.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா ஆகியோரும் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.

நியூஸிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியிருப்பது அடுத்தப் போட்டிகளில் பலன்கள் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வரும் போட்டிகளில் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்துவோம் என நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார். டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய லதாம் ஒருநாள் தொடரிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். டெய்லர், கப்தில் ஆகியோர் இன்னமும் ரன்கள் குவிக்காமல் இருப்பது நியூஸிலாந்து அணிக்குப் பெரும் சுமையாக இருந்துவருகிறது.  

ஒரு நாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி 4-ஆவது இடத்திலும், நியூஸிலாந்து அணி 3-ஆவது இடத்திலும் உள்ளன. இந்தத் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.